×

யானைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ₹2 கோடியில் பணிகள்

தர்மபுரி, ஏப்.7: தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில், யானைகளுக்கு உணவு மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்ய குடிநீர்தொட்டி, குட்டை, தடுப்பணைகள் உள்ளிட்டவை ₹2 கோடியில் பணிகள் செய்யப்பட்டுள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தர்மபுரி, அரூர், மொரப்பூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி ஆகிய 8 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரக காடுகளில் யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளது. இதில் யானைகள் நடமாட்டம் உள்ள வனப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 50 முதல் 150 யானைகள் இந்த வனப்பகுதிகளில் உள்ளன. தற்போது யானைகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கோடைகாலம் தொடங்கியுள்ளதால், கர்நாடக, கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன. இந்த யானைகள் தற்போது தர்மபுரி மாவட்ட வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. இதனால் கிராமங்களுக்குள் யானைகள் வரும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. பஞ்சப்பள்ளி, பாலக்கோடு பகுதியில் 2 யானைகள் கடந்த ஒருவாரமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வழிதவறி இடம்பெயர்ந்து வந்த போது, மின்வேலி மற்றும் மின்கம்பிகளில் சிக்கி 4 யானைகள் மாவட்டத்தில் பலியாகியுள்ளன. கடந்த வாரம் ஒகேனக்கல் அருகே விஷக்காய் மற்றும் சேற்றில் சிக்கி 2 யானைகள் இறந்துள்ளன. இவ்வாறு கடந்த 2 மாதத்தில் 6 யானைகள் இறந்துள்ளன. மேலும் ஒகேனக்கல்லில் தாய் யானை விட்டுசென்ற ஒரு குட்டியானை முதுமலையில் இறந்துள்ளது. யானைகள் வனத்தை விட்டு வெளியே வராமல் இருக்க, தர்மபுரி மாவட்ட வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வனத்திற்குள்ளே யானைகள் தண்ணீர் குடிக்க தொட்டிகள் அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட வன அலுவலர் அப்பாலநாயுடு கூறியதாவது: கோடைகாலங்களில் உணவிற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் விதமாக, வனப்பகுதிக்குள் சோலாரில் இயங்கும் மின்மோட்டார் வசதி கொண்ட ஆழ்துளை கிணறுகள் மூலம், குடிநீர் தொட்டி அமைத்து வன விலங்குகளுக்கு குடிநீர் தேவை ₹26 லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், வனப்பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு கசிவுநீர் குட்டை, தடுப்பணைகள், நீர்துளைகள் புதியதாக அமைத்தும், அமைக்கப்பட்டும் வருகின்றன. ஏற்கனவே உள்ள குட்டை, தடுப்பணைகள் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றன. வனவிலங்குகளின் குடிநீர் தேவை தீர்க்கப்பட்டு வருகிறது. மண் மற்றும் ஈரப்பதம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற பணிகளுக்காக ₹2 கோடி செலவிடப்பட்டுள்ளது. மேலும் காப்புக்காடுகளில் இருந்து வெளியே வரும் யானைகளை கண்காணித்து, மீண்டும் காட்டுக்குள் விரட்டுவதற்காக யானை தடுப்பு காவலர்கள் மற்றும் சிறப்பு இரவு ரோந்து குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வனப்பணியாளர்கள் மற்றும் கிராம வனக்குழுக்கள் மூலம், அப்பகுதி மக்களுக்கு மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வனநில ஆக்கிரமிப்பு மற்றும் வனவிலங்கு வேட்டையாடுதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வனக்குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வனப்பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகள் காப்புக்காட்டில் இருந்து வெளியேறி, கிராமப்புறங்களில் ஊடுருவுவதை தடுக்கும் வகையில், புதிய யானை தாண்டா அகழிகள், 5 கிலோ மீட்டர் தூரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள யானை தாண்டா அகழிகளை பராமரிப்பு பணி மேற்கொள்ள ₹39 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post யானைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ₹2 கோடியில் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...