×

மேல்வெட்டுவாணம் பாலாற்றுப்படுகையில் ஆக்கிரமிப்பு கரும்பு, நெற்பயிர்கள் அதிரடி அகற்றம்-விவசாயிகள் காலஅகாசம் கேட்டு வாக்குவாதம்

பள்ளிகொண்டா : தமிழகம் முழுவதும் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த கனத்த மழையினால், பாலாற்றில் லட்சம் கன அடிக்கு மேல் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் சீறிப்பாய்ந்தது. பாலாறு நீர்நிலைப்பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியதால் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளை பாரபட்சமின்றி முழுவதுமாக அகற்றிட வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகொண்டா அடுத்த மேல்வெட்டுவாணம் பாலாறு படுகை ஒட்டியுள்ள பகுதியில் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக 50 ஏக்கருக்கு மேல் சுற்றிவளைத்து 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆக்கிரமித்து காலம் காலமாக பயிரிட்டு வருகின்றனர். கடந்த வெள்ளத்தின்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இந்த இடத்தினை ஆய்வு செய்தார். அப்போதே அங்கு பயிர் செய்து வந்த விவசாயிகளுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், இந்தாண்டு கரும்பு, நெல் சாகுபடி அறுவடை முடிந்தும் மீண்டும் பயிரிட தொடங்கினர். இதனை அறிந்த வருவாய்த்துறையினர் மற்றும் பொதுபணித்துறையினர் இணைந்து நேற்று ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணிகளில் களமிறங்கினர். முதல் கட்டமாக பாலாற்றுப்படுகையை ஒட்டி பயிரிடப்பட்டிருந்த கரும்பு தோட்டம் முற்றிலுமாக ஜேசிபி இயந்திரம் அகற்றப்பட்டது. மேலும், நெற்பயிர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது, ஆக்கிரமிப்பு விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த அறுவடைக்கு கால அவகாசம் கொடுங்கள் என்று கேட்டதற்கு தாசில்தார் விநாயக மூர்த்தி உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில் எங்கள் பணியை நாங்கள் செய்கிறோம். எங்களுக்கு தொந்தரவு தர வேண்டாம் என திட்டவட்டமாக கூறி பணிகளை தொடருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முதல் கட்டமாக சுமார் 25 ஏக்கர் பரப்பளவுள்ள பாலாறு ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி மீட்டெடுத்தனர். கரும்பு, நெல் பயிர்களை அகற்றும் போது சில விவசாயிகள் மனமுடைந்தனர். இதற்கு அதிகாரிகள் எங்களுக்கும் பயிர்களை அழிப்பது கடினமாகதான் உள்ளது. அரசு நீர்நிலைகளுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யாமல் சொந்த இடங்களில் பயிர் வையுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை கூறினர். இதுகுறித்து பாசனப்பிரிவு உதவி பொறியாளர் ராம்குமார் கூறுகையில்,  பள்ளிகொண்டா பாலாறு படுகை ஆக்கிரமிப்பு முழுவதும் இன்னும் ஒரு சில நாட்களில் அகற்றி பாலாறு நீர்நிலைகளின் வழித்தடங்கள் அனைத்தும் மீட்டெடுக்கப்படும் என்றார்.  இந்த ஆக்கிரமிப்பு அகற்றும்போது, அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட 45க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.  அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க பள்ளிகொண்டா சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்….

The post மேல்வெட்டுவாணம் பாலாற்றுப்படுகையில் ஆக்கிரமிப்பு கரும்பு, நெற்பயிர்கள் அதிரடி அகற்றம்-விவசாயிகள் காலஅகாசம் கேட்டு வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Melvettuwanam ,Tamil Nadu ,
× RELATED கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற...