×

மேயர், நகராட்சி தேர்தலில் 40% இடம் கேட்டு பாஜ போர்க்கொடி நெருக்கடியில் தவிக்கும் அதிமுக தலைமை

* பாஜவை கழட்டிவிட தலைவர்கள் வலியுறுத்தல் * அதிமுக-பாஜ கூட்டணியில் பூகம்பம் வெடித்ததுசென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்டு இப்போதே பாஜ நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாஜ தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் கூட்டணியில் பூகம்பம் வெடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாஜ இடம்பெற்றிருந்தது. முதலில் அதிமுகவிடம் 60 தொகுதிகள் வரை பாஜ கேட்டது. இதற்காக பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பாஜவுக்கு அவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதிக தொகுதிகளை ஒதுக்கினால் பாஜ தோல்வியை தான் சந்திக்கும். மக்கள் ஒன்றிய அரசு மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர். இதனால், நாங்கள் கொடுக்கும் சீட்டை வாங்கிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுங்கள் என்று பிடிவாதமாக கூறி விட்டது அதிமுக. இதனால், அதிமுக, பாஜ தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. தேர்தல் நெருங்கி வந்ததால் பாஜ யாருடனும் கூட்டணி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிமுக கொடுக்கும் சீட்டை பெற்றுக் ெகாண்டு கடைசி நேரத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க முடிவு செய்தது. அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், கேட்ட தொகுதிகள் எதுவும் வழங்கப்படவில்லை. பாஜ பலமாக இருக்கும் என்று கருதப்பட்ட தொகுதிகளை கூட அதிமுக ஒதுக்கவில்லை என்று நிர்வாகிகள் அப்போது குற்றம் சாட்டினர். இந்நிலையில் தேர்தல் முடிவு வந்தது. அதில் 4 தொகுதிகளில் மட்டுமே பாஜ ெவற்றி பெற்றது. மற்ற தொகுதிகளில் பாஜ தோல்வியை தழுவியது. தேர்தல் தோல்விக்கு அதிமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுக்களே காரணம் என்று பாஜ தலைவர்கள் சிலர் வெளிப்படையாக பேசதொடங்கினர். இதனால், இந்த கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் எழுந்தது. கடைசியில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாஜ தலைவர்கள் அறிவித்தனர்.தற்போது, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்கனவே தயாராகி விட்டன. அந்தந்த மாவட்டங்களின் சார்பில் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் முடிந்துள்ளது. அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ரெடியாக  வைத்துள்ளன. எந்த நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் உடனடியாக  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு பிரசாரத்தில் குதிக்க தயாராக உள்ளன. அதே  நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் கூட்டணிக்கு தலைமை வகிக்கும்  கட்சிகளிடம் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத  நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜ இப்போதே போர்க்கொடி தூக்க தொடங்கியுள்ளது. அதாவது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதனால்,  அதிக இடங்களை ஒதுக்க வேண்டும் என்று பாஜ தனது சீட் கணக்கை தொடங்கியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலை போல இல்லாமல் இந்த உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்கும் மாநகராட்சியில் மேயர் பதவி, நகராட்சி தலைவர் பதவி, பேரூராட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்ற என்ற முடிவில் பாஜ இறங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவிகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி ேதர்தலில் 40 சதவீதம் இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்க பாஜ தயாராகி வருகிறது. ஏனென்றால், உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றால் கட்சியை தமிழகத்தில் பலமாக்கி விடலாம். இது அடுத்து வர உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜவுக்கு துணையாக இருக்கும் என்று டெல்லி பாஜ மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் உள்ளாட்சி தேர்தல் சீட் தொடர்பாக அதிமுக நிர்வாகிகளை பாஜ தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்காக விரைவில் பாஜவில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட உள்ளது.அதே நேரத்தில் கடந்த முறை பாஜவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுகவுக்கு வரக்கூடிய வாக்குகள் அப்படியே திரும்பி விட்டது. எனவே, பாஜவை இந்த முறை ஒரு பொருட்டாக கருதாமல் நாம் வர உள்ள உள்ளாட்சி தேர்தலை சந்திக்கலாம் என்று அதிமுகவில் ஒரு சில தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படியே கூட்டணிக்கு பாஜ வந்தால் நாம் அளிக்கும் இடங்களில்தான் போட்டியிட வேண்டும் என்று அதிமுகவில் சில தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற விவகாரங்களால் அதிமுக கூட்டணியில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது. இதற்கு ஏற்ப, உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் அதிக இடங்களை கேட்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பகிரங்கமாக பேச்சை ஆரம்பித்துள்ளார். இதேபோல பாஜவில் உள்ள பல தலைவர்கள் அதிக இடங்களை அதிமுக பாஜவுக்கு ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்த தொடங்கியுள்ளனர். இதனால், வரும் நாட்களில் உள்ளாட்சி தேர்தல் சீட் விவகாரம் இரு கட்சிகளிடையே அனல் பறக்கும் என்று தெரிகிறது….

The post மேயர், நகராட்சி தேர்தலில் 40% இடம் கேட்டு பாஜ போர்க்கொடி நெருக்கடியில் தவிக்கும் அதிமுக தலைமை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,Chennai ,Tamil Nadu ,Local ,
× RELATED தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026...