×

மெரினா கடற்கரையில் தொலைத்த ஹெல்மெட்டை தேடிய போது திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை: 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

சென்னை: மெரினா கடற்கரையில் தொலைத்த ஹெல்மெட்டை தேடிய போது, திருடன் என நினைத்து வாலிபர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் அடித்து படுகொலை செய்தனர். மேலும் 2 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள மணல் பரப்பில், 3 வாலிபர்கள் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சுயநினைவின்றி கிடந்தனர்.

இதை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 3 வாலிபர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் செல்லும் போது 3 வாலிபர்களில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிந்து, இறந்த வாலிபர் உட்பட 3 பேர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (20), ஆவடியை சேர்ந்த அரவிந்தன் (22), சஞ்சய் (18) என தெரியவந்தது. 3 பேரும் ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளனர்.

இதில் சஞ்சய் என்பவருக்கு நேற்று முன்தினம் பிறந்த நாள் என்பதால், 3 பேரும், ஆவடி ரயில் நிலையத்தில் தனது பைக்குகளை விட்டுவிட்டு ரயில் மூலம் சென்ட்ரல் வந்துள்ளனர். பிறகு, பறக்கும் ரயில் நிலையம் மூலம் மெரினா கடற்கரைக்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளனர். பின்னர், மெரினா கடற்கரையில் மது அருந்தி, பிறந்த நாளை ெகாண்டாடியுள்ளனர். போதை தலைக்கேறிய பிறகு கையில் கொண்டு வந்த ஹெல்மெடை 3 பேரும் எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அவற்றை தேடி மெரினா கடற்கரை முழுவதும் சுற்றியுள்ளனர். அண்ணாசதுக்கம் அருகே அமைக்கப்பட்டுள்ள கடைகள் அருகே 3 பேரும் ஹெல்மெட்டை தேடியபோது, மெரினா கடற்கரையில் கடை நடத்தும் 7 பேர் கொண்ட கும்பல், இவர்களை பிடித்து, தங்களது கடையில் திருட வந்து இருக்கிறீர்களா என்று கேட்டு தகராறு செய்துள்ளனர்.

அப்போது 3 பேரும் மது போதையில் இருந்ததால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த 7 பேர், கையில் வைத்திருந்த கத்தி மற்றும் உருட்டுக் கட்டையால் கடுமையாக விக்னேஷ், அரவிந்தன், சஞ்சய் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் 3 பேரும் சுய நினைவிழந்து மணல் பரப்பிலேயே சுருண்டு விழுந்து கிடந்ததும் இதில் விக்னேஷ் இறந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து அண்ணாசதுக்கம் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து, சிசிடிவி பதிவுகள் மூலம் மெரினா கடற்கரை பகுதியில் கடை நடத்தும் 5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சஞ்சய்க்கு தலையில் பலமாக தாக்கப்பட்டதால் அவரது மூளையில் இருந்து ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சஞ்சய் டாக்டர்கள் பரிந்துரைப்படி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரவிந்துக்கு வலது கை மணி கட்டில் வெட்டுக்காயம் உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரையில் திருடன் என நினைத்து வாலிபர் ஒருவரை 7 பேர் கொண்ட கும்பல் அடித்து கொலை செய்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post மெரினா கடற்கரையில் தொலைத்த ஹெல்மெட்டை தேடிய போது திருடன் என நினைத்து வாலிபர் அடித்து கொலை: 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Marina beach ,Chennai ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?