3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 15 ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: ஊதிய முரண்பாடுகளை நீக்கி சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3வது நாளாக உணவு, குடிநீர் இல்லாததால் 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கிய நிலையில் இன்று 3வது நாளாக சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு தரப்பில் ஒரே வேலைக்கு ஒரே ஊதியம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதம் அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். 

Related Stories: