×

முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் பழுதடைந்த வீடுகள் இடித்து அகற்றம்

 

முத்துப்பேட்டை, ஜூன் 10: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் பழுதடைந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் நூறு ஆண்டுகளை கடந்த பழமை வாய்ந்ததாகும். ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்த ரயில்வே நிலையம் மூலம் இப்பகுதியில் உள்ள உலக புகழ்பெற்ற தர்கா மற்றும் பிரசித்தி பெற்ற தில்லை ராமர்கோவில் உள்ளிட்ட கோவில்கள் உட்பட பல்வேறு வழிப்பாட்டு தளங்கள், லகூன் மற்றும் அலையாத்திகாடுகள் உட்பட சுற்றுலாத்தலங்களால் ஒரு காலத்தில் ரயில்வே துறைக்கு அதிக லாபத்தை பெற்று தந்த ஒரு பகுதியாகும்.

இந்த நிலையில் 12வருடங்களுக்கு முன்பு அகல ரயில் பாதை பணிக்காக இப்பகுதிக்கு வந்த ரயில்கள் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணிகள் துவங்கி முழுவீச்சில் நடைபெற்று இப்பகுதியில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் உள்ள பல்வேறு பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய ரயில் நிலையம் கட்டிடம் மற்றும் மீட்டர் பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு பணிகள் முடிந்து சமீபத்தில் திருவாரூர் காரைக்குடி ரயில் மற்றும் தொலைதூர ரயில்களும் சென்று வருகிறது.

இந்த நிலையில் இந்த ரயில் நிலையம் பகுதியில் பல்வேறு தேவையற்ற கட்டிடங்கள் உட்பட பல பகுதிகளை இடித்து சீரமைப்பு செய்த ரயில்வேத்துறையினர் ரயில்வே பணியாளர்கள் தங்கிய பழமையான வீடுகளை இடித்து அகற்றவில்லை. இதனால் அந்த ஓட்டு வீடுகள் பழுதடைந்து பயனற்று கிடந்தது. இதில் இப்பகுதியில் வந்து செல்லும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளதுடன் குடிமகன்களின் பாராகவும், பலருக்கு கேளிக்கை விடுதியாகவும் உள்ளது. இதனால் இதனை சுற்றி உள்ள ஏராளமான குடியிருப்பு வாசிகள் அருவருப்பான சூழலில் வசித்து வருகின்றனர்.

இரவில் அப்பகுதி திகிலூட்டும் வகையில் இருப்பதால் யாரும் வர தவிர்த்து விடுகின்றனர். அருகில் குடியிருப்பவர்களும் பயந்து வசித்து வருகின்றனர். எனவே தென்னக ரயில்வே நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து ரயில் நிலைய வளாகத்தில் உள்ள பழுதடைந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதை சுட்டிக்காட்டி கடந்த 23ம் தேதி அன்று தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைக்கண்ட ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீடுகளை இடிக்க உத்தரவிட்டனர். இந்த நிலையில் சமீபத்தில் அந்த பழமையான வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post முத்துப்பேட்டை ரயில் நிலைய வளாகத்தில் பழுதடைந்த வீடுகள் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Muthuppet railway station ,Muthuppet ,Dinakaran ,Muthupet railway station ,
× RELATED முத்துப்பேட்டையில் தொடக்கப்பள்ளி சார்பில் ஐம்பெரும் விழா