×

முதியோர்களை நன்றாக பராமரிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

 

பெரம்பூர், டிச.25: வடசென்னை மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், வியாசர்பாடியில் உள்ள முதியோர் இல்லத்தில் கிறிஸ்துமஸ் பெரு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு முதியோர் இல்லத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், முதியோர்களோடு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடிய அவர் முதியோர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார். பின்னர் அவர் பேசியதாவது: அம்மா, அப்பா நம்மை வளர்த்து ஆளாக்க எவ்வளவோ சிரமம் படுகிறார்கள். வயதான காலத்தில் அவர்களை பார்க்க யாரும் இல்லாத நிலையில் முதியோர் இல்லத்தில் சேர்க்கின்றனர்.

வாழும் தெய்வங்களாக கண்முன்னே இருப்பவர்கள் அம்மா, அப்பாதான். இன்றைக்கு மருமகளாக இருப்பவர்கள், நாளை மாமியராக ஆகும் நிலை வரும். எனவே, உறவுகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி, நெல்லையில் மழையால் பாதித்த மக்களை சந்தித்தேன். எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம். தூத்துக்குடியில் அதிக கிறிஸ்துவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இது கருப்பு கிறிஸ்துமஸ்தான். அந்த அளவிற்கு தூத்துக்குடி பாதிக்கப்பட்டுள்ளது.

மழை வெள்ளத்தில் எத்தனை பேர் உயிர் இழந்துள்ளனர் என வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்ய வேண்டும். எண்ணூரில் மீனவர்கள்தான் அதிகம். கடலுக்கு போனால்தான் அவர்களுக்கு வாழ்வாதாரம். மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நிவாரணம் கொடுக்க வேண்டும்.

சிபிசிஎல் நிறுவனம் மீனவர்களுக்கு நிவாரண தொகை உடனடியாக வழங்க வேண்டும். எல்லாரும் முதியோர்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் எனது கிறிஸ்துமஸ் செய்தி. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்வில், தேமுதிக துணை பொது செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post முதியோர்களை நன்றாக பராமரிக்க வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,Perambur ,North Chennai West District Demudika ,Vyasarpadi ,Dinakaran ,
× RELATED பெரம்பூர் வணிக வளாகத்தில் உள்ள...