×

முதற்கட்ட முகாமில் 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்

கிருஷ்ணகிரி, ஆக. 6: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் முதற்கட்ட முகாமில் 2.40 லட்சம் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பர்கூர் ரேஷன் கடை சார்பில் நடந்த விண்ணப்ப பதிவு பணிகளை, கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் உரிமைத்தொகை ₹1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 20ம் தேதி முதல், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக வழங்கப்பட்டது. மாவட்டத்தில் இயங்கி வரும் 1094 ரேஷன் கடைகளில் உள்ள 5 லட்சத்து 64 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதாரர்கள், இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில், முதல் கட்டமாக 2 லட்சத்து 74,853 பேருக்கு ஒப்புதல் ரசீது மற்றும் விண்ணப்பம் வழங்கப்பட்டது. இவை 823 விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்கள் மூலம் இணையதளத்தில் பதிவும் செய்யப்பட்டன. பர்கூர் தாலுகா அலுவலகத்தில், பர்கூர் ரேஷன் கடை எண்.2க்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத்ெதாகை திட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நேற்று நடந்தது. இதை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், ₹1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள், கடந்த மாதம் 20ம் தேதி முதல் வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முகாம், கடந்த மாதம் 24ம் தேதி துவங்கியது. முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 916 விண்ணப்பங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறும் முகாம், இன்று (5ம் தேதி) முதல் வருகிற 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின்கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

விண்ணப்பப் பதிவு முகாமில், ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக, 8 வட்டங்களில் உள்ள 510 ரேஷன் கடைகளில் உள்ள 2 லட்சத்து 66 ஆயிரத்து 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு, கடந்த 1ம் தேதி முதல் 3ம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. 774 விண்ணப்ப பதிவு தன்னார்வலர்கள் மூலம் வருகிற 16ம் தேதி வரை மனுக்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. இவ்வாறு கலெக்டர் சரயு தெரிவித்தார். அப்போது துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post முதற்கட்ட முகாமில் 2.40 லட்சம் விண்ணப்பங்கள் பதிவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...