×

மாவட்டம் முழுவதும் 1000 போலீஸ் பாதுகாப்பு

தர்மபுரி, ஆக.15: சுதந்திர தினவிழாவையொட்டி, தர்மபுரி மாவட்டம் முழுவதும் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே ஸ்டேஷன், பஸ் நிலையத்தில் தீவிர சோதனை நேற்று நடத்தப்பட்டது. மேலும், மாவட்ட எல்லைகளில் வாகன தணிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தினவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15ம்தேதி) காலை நடக்கிறது. இதையொட்டி, காலை 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். சிறப்பாக பணி புரிந்தவர்களுக்கு அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குகிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். விழாவிற்கு தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பிரியா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பின்னர், மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் நேற்று, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தினவிழாவிற்கான போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. விழாவையொட்டி விளையாட்டு மைதானத்தில் பொதுமக்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள தடை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை முதல், போலீசாரின் கட்டுப்பாட்டில் மாவட்ட விளையாட்டு மைதானம் வந்தது. வெடிகுண்டு கண்டுபிடிக்கும் சோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்டது. விளையாட்டு மைதானத்தின் நுழைவாயிலில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல், மாவட்டத்தில் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தொப்பூர், காரிமங்கலம், மஞ்சவாடி உள்ளிட்ட 6 இடங்களில் சோனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சோதனை செய்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கின்றனர்.

தர்மபுரி, மொரப்பூர் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பின்னரே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கின்றனர். மேலும், தர்மபுரி, மொரப்பூர் ரயில்நிலையம் நின்று செல்லும் ரயில்களில் போலீசார் பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். தர்மபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸ் எஸ்ஐ.,க்கள் கோதண்டபாணி, ராமசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ரயில்வே தண்டவாளத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 750 போலீஸ், 250 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் நேற்று ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் தீவிர ரோந்து பணி ேமற்கொள்ளப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

The post மாவட்டம் முழுவதும் 1000 போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Independence Day ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED செல்போன் திருடிய வாலிபர் கைது