×

மாவட்டத்தில் 1,004 மையங்களில் மெகா சிறப்பு முகாம் ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 1,004 மையங்களில் நேற்று நடந்தது. அதில் 1 லட்சத்து 4ஆயிரத்து 325 பேர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 860 கிராம ஊராட்சிகள் 10 பேரூராட்சிகள் நான்கு நகராட்சி பகுதிகளில் என மொத்தம் 1,004 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. ஒவ்வொரு முகாமிலும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட குழுவினர் முகாமிட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.நேற்று காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது. ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். பெரும்பாலான மையங்களில் மதியம் 2 மணி அளவில், அந்த மையங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகள் முழுவதும் செலுத்தி முடிக்கப்பட்டது. எனவே, அதன் பிறகு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை பல இடங்களில் காணப்பட்டது. குறிப்பாக, மாவட்டம் முழுவதும் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் ஆர்வமுடன் திரண்டு வந்து தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர். கிராமப்புறங்களில் ஏற்கனவே வீடு வீடாகச் சென்று தடுப்பூசி அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.அதோடு, இனி வரும் காலங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கும் நூறு நாள் வேலைத்திட்ட பயனை பெறுவதற்கும் தடுப்பூசி செலுத்தி இருப்பதற்கான சான்று அவசியம் என வலியுறுத்தப்பட்டது.அதன் எதிரொலியாக பொதுமக்கள் முகாமுக்கு ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மேலும், அனைத்து முகாம்களிலும் கோவாக்சின் மற்றும் கோவிஷூல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். பெரும்பாலான பொதுமக்கள் கோவி ஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொள்ள விரும்பினர்.மேலும், தடுப்பூசி சிறப்பு முகாம்களை கண்காணிக்க 32 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு ஏற்படுத்தப்பட்டன. அதோடு, 5 தடுப்பூசி மையங்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலர் என்ற அடிப்படையில், 184 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடந்த கொரோனா சிறப்பு முகாம்களில் நேற்று கலெக்டர் முருகேஷ் மற்றும் இந்த மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலரான நில அளவை துறை ஆணையாளர் ஆணையர், கூடுதல் கலெக்டர் பிரதாப், டிஆர்ஓ முத்துக்குமாரசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தடுப்பூசி பற்றாக்குறையாக இருந்த மையங்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.அதைத் தொடர்ந்து கலெக்டர் பா.முருகேஷ் கூறுகையில், ‘திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீத தடுப்புசி செலுத்துவதற்கான தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக 1004 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்மூலம், 1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நம்முடைய மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட தடுப்பூசி முழுமையாக இன்று(நேற்று) பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கிய முதல்வர் மு.கஸ்டாலின், மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு மற்றும் முகாம் நடைபெற ேதவையான ஒத்துழைப்பு அளித்த துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுகாதாரத்துறையினர், ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் அரசு துறை அலுவலர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம்திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.எனவே, அரசு வழங்கிய தடுப்பூசி முழுவதுமாக நேற்றைய சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் 77,922 நபர்கள் முதல் தவணைத் தடுப்பூசியும், 26,403 நபர்கள் இரண்டாவது தவணைத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டனர்.அதன்படி, மாவட்டம் முழுவதும் 1,04,325 நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post மாவட்டத்தில் 1,004 மையங்களில் மெகா சிறப்பு முகாம் ஒரேநாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி-பொதுமக்கள் ஆர்வமுடன் குவிந்தனர் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Thiruvannamalai district ,Corona ,Vaccine Mega Special Camp ,Mega Special Camp ,
× RELATED திருவண்ணாமலையில் உயிர் பிரிய...