×

மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 439 வழக்குகளுக்கு ரூ.16.81 கோடிக்கு தீர்வு

திருப்பூர், ஜூலை9:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 439 வழக்குகளுக்கு ரூ.16.81 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கும் இழப்பீடு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நேற்று முதன்மை மாவட்ட நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஸ்வர்ணம் நடராஜன் உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) 7 அமர்வுகளாக நடந்தது. இதில் திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட விரைவு மகிளா நீதிபதி மற்றும் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலையில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்வு நடந்தது. இதுபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சேர்த்து 1226 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 439 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.16 கோடியே 81 லட்சத்து 45 ஆயிரத்து 511 ஆகும்.

இதில் 157 மோட்டார் வாகன விபத்துகள் ரூ.11 கோடியே 15 லட்சத்து 16 ஆயிரத்து 125, 53 சிவில் வழக்குகள் ரூ.4 கோடியே 36 லட்சத்து 98 ஆயிரத்து 930, 8 குடும்ப நல வழக்குகள் ரூ.20 லட்சத்து 59 ஆயிரம், 156 சமரசத்திற்கு உரிய குற்ற வழக்குகள் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 200க்கும், 11 காசோலை மோசடி வழக்குகள் ரூ.33 லட்சத்து 73 ஆயிரத்து 524க்கும், 54 வங்கி வாரக்கடன் வழக்குகள் ரூ.65 லட்சத்து 90 ஆயிரத்து 732க்கும் என தீர்வு காணப்பட்டது. திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பல்லடத்தை சேர்ந்த சக்தி பிரவீன் என்பவர் விபத்தில் பலியான நிலையில், அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதற்கு சமரச தீர்வு காணும் வகையில் ரூ.52.50 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடாக சக்தி பிரவீன் குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்டது.

இதற்கான ஆணையை மகிளா நீதிமன்ற நீதிபதி பாலு மற்றும் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி குமார் வழங்கினர். நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி செல்லத்துரை, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கண்ணன், விரைவு நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார், வழக்கறிஞர்கள் ரகுபதி, பத்மநாபன், பாலகுமார், மோகன், பாலாஜி கிருஷ்ணா, மல்லிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது.தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் குழுவின் உத்தரவு படியும் தாராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று காலை 10 மணி அளவில் துவங்கப்பட்டது.

வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதியுமான தர்ம பிரபு தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாபு முன்னிலை வகித்தார். இதில் 17 மோட்டார் வாகன விபத்துகளுக்கான வழக்குகளும், 37 உரிமையியல் வழக்குகளும், 43 குற்றவியல் மற்றும் சிறு வழக்குகளும், ஜீவனாம்சம் கூறிய இரண்டு வழக்குகளும் குடும்ப வன்முறை சம்பந்தப்பட்ட 2வழக்குகளும், 2 காசோலை மோசடி வழக்குகளும் என மொத்தம் 103 வழக்குகளில் ரூ.4 கோடியே 25 லட்சத்து 83 ஆயிரத்து 160க்கு சமரச தீர்வானது. இதன் மூலம் வழக்குகளை தொடுத்த 235 பயனாளிகள் பலனடைந்துள்ளனர். மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள், பயனாளிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

The post மாவட்டத்தில் லோக் அதாலத்தில் 439 வழக்குகளுக்கு ரூ.16.81 கோடிக்கு தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Athalam ,Tirupur ,Dinakaran ,
× RELATED ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நியாயமான கூலி உயர்வை பெற்றுத்தர வேண்டும்