×

மாவட்டத்தில் தொழுநோய் கண்டுபிடிப்பு; முகாம்; வீடு வீடாக தீவிர பரிசோதனை: வரும் 22ம் தேதி வரை ஏற்பாடு; அதிகாரி தகவல்

ஈரோடு, பிப்.8: ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நேற்று துவங்கியது. இதில், முன் களப்பணியாளர்கள் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நோய் குறித்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்த முகாம் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது என அதிகாரி தெரிவித்தார். தொழுநோய் பரவலை முற்றிலுமாக தடுக்க ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் 11 வட்டாரத்தில் நடத்திட ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர்(தொழுநோய்) டாக்டர் ரவீந்திரன் அறிவுறுத்தியிருந்தார்.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பவானி, சத்தியமங்கலம், சென்னிமலை தவிர, சித்தோடு, சிறுவலூர், டி.என்.பாளையம், தாளவாடி, அத்தாணி, குருவரெட்டியூர், புளியம்பட்டி, நம்பியூர், திங்களூர், மொடக்குறிச்சி, சிவகிரி ஆகிய 11 வட்டாரங்களில் நேற்று காலை முதல் தீவிர தொழு நோய் கண்டுபிடிப்பு முகாம் துவங்கியது. தொழுநோய் கண்டுபிடிப்பு களப்பணியில் ஈடுபடும் முன் களப்பணியாளர்கள் மக்களிடம் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்கின்றனர். மேலும், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், 100 நாள் வேலை திட்டம் பணியாளர்கள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களான பஸ் ஸ்டாண்ட், கடை வீதிகளிலும் களப்பணியாளர்கள் நேரடியாக சென்று சோதனை மேற்கொள்கின்றனர். இது தவிர அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வரும் மக்களிடம் தொழுநோய் பரிசோதனை செய்து, நோய் தொற்று உள்ளதா? என கண்டறியப்படுகிறது.

இந்த முகாமானது வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 11 வட்டாரங்களில் தீவிர தொழுநோய் கண்டறியும் முகாம் துவங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் 1,464 முன்களப்பணியாளர்கள், 146 மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், வீடுவீடாக சென்று ஆண்களை ஆண் களப்பணியாளர்களும், பெண்களை பெண் களப்பணியாளர்களும் தொழுநோய்க்கான பரிசோதனை செய்கின்றனர். தொழுநோய் ஆரம்ப அறிகுறியாக, தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், தோலில் எண்ணெய் பூசியது போன்ற மினுமினுப்பு, கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு மற்றும் குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண்கள், காது மடல் தடித்து, அவற்றின் பின்பகுதியில் சிறுசிறு கட்டிகள், புருவமுடி இல்லாமல் இருத்தல், கண் இமைகள் மூட இயலாத நிலை, கை மணிக்கட்டு துவண்ட நிலை, கை விரல்கள் மடங்கிய நிலை, பாதம் துவண்டு மேலே தூக்க முடியாத நிலை, உடலில் முடிச்சு முடிச்சாக காணப்படுதல் அறிகுறிகளாகும்.

இந்த அறிகுறி உள்ளவர்கள், அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று பரிசோதனை செய்து, நோயின் தன்மைக்கு ஏற்ப 6 மாதம் முதல் ஒரு ஆண்டு முழு சிகிச்சை மூலம் குணமடையலாம். தொழுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதன் மூலம், முழுமையாக குணப்படுத்தவும், ஊனம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோய் பாதிப்பு ஏற்பட்டவரின் உடன் இருப்பவர்கள், அருகில் வசிப்பவர்கள், உடன் பணிபுரிபவர்கள் தொழுநோய் தடுப்பு மருந்து எடுத்து கொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களுக்கு தொழுநோய் பரவாமல் தடுக்க முடியும். தொழுநோய் கண்டறிய வரும் முன் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மாவட்டத்தில் தொழுநோய் கண்டுபிடிப்பு; முகாம்; வீடு வீடாக தீவிர பரிசோதனை: வரும் 22ம் தேதி வரை ஏற்பாடு; அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து..!!