×

மாவட்டத்தில் தினசரி 40 டன் தக்காளி அறுவடை

தர்மபுரி, ஆக.2: தமிழகத்தில் வரலாறு காணாத வகையில், தக்காளி விலை உயர்ந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தினசரி 40 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. வளர்ப்பு நாய்களை தக்காளி தோட்டத்திற்கு பாதுகாப்பிற்காக கட்டிப்போட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் 30 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 5 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைக்கு தினசரி 40 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. தினசரி 100 டன் வந்த இடத்தில் தற்போது 40 டன் தான் கிடைக்கிறது. தர்மபுரி மாவட்ட தக்காளி திருச்சி, சேலம், கன்னியாகுமரி மற்றும் வெளிமாவட்டங்களுக்கும், கேரளா பாலக்காட்டிற்கு செல்கிறது.

தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. பாலக்கோடு, தர்மபுரி, கம்பைநல்லூர் தக்காளி சந்தைக்கு சராசரி 100 டன் தக்காளி தினசரி வரும். தற்போது 40 டன் தான் விற்பனைக்கு வருகிறது. வெளி வியாபாரிகள் நேரில் வந்து தக்காளி வாங்கி செல்கின்றனர். கோடை வெயில் மற்றும் கடந்த இரு மாதத்திற்கு முன்பு பெய்த மழையில் தக்காளி செடிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. சந்தைக்கு தக்காளி வரத்து சரிந்தது. தற்போது உள்ளூர் தேவைக்கு போக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்திற்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தக்காளி செல்கிறது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ₹84 முதல் 94 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ₹100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், தக்காளி தோட்டத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்திலும் தக்காளி தோட்டங்களுக்கு பாதுகாப்பு பணியில் தோட்டத்தின் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாப்பாரப்பட்டி அருகே பாடி கிராமத்தில் ஒரு வீட்டின் அருகே தக்காளி தோட்டத்திற்கு வளர்ப்பு நாய் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தோட்டத்திற்கு அருகே சென்றால் நாய் குறைக்குகிறது. அதைபார்த்து தோட்ட உரிமையாளர் அல்லது உறவினர்கள் வெளியே வந்து பார்க்கின்றனர். தோட்டத்தின் அருகே கயிற்றில் கட்டியபடி நாய் உள்ளது.

விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தக்காளி அதிக விளைச்சல் கொடுக்கும். அப்போது விலை வீழ்ச்சியால் சாலையோரங்களில் கொட்டும் நிலை ஏற்படும். நடப்பாண்டு ஆண்டு பருவம் தவறி பெய்த மழை, கொளுத்தும் வெயிலால் தக்காளி உள்ளிட்ட காய்கறி விலையேற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் தக்காளி உற்பத்தி அதிகரித்து விலை குறைந்து காணப்படும். நடப்பாண்டு விலை குறைந்து காணப்பட வில்லை சீரான விலையில் விற்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒருமாதமாக தக்காளியின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி சந்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சந்தை, மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி, பரவை சந்தைகள், திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை, கோவை மலுமிச்சம்பட்டி சந்தை மற்றும் சென்னை கோயம்பேடு சந்தை போன்றவை தக்காளி வியாபாரத்துக்கு முக்கியமானவை. இந்தச் சந்தைகளில் நிர்ணயிக்கப்படும் விலையே தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வியாபாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை குறையவில்லை.

தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திரா மாநிலங்கள் தக்காளி சாகுபடியில் முன்னிலையில் உள்ளன. இம்மூன்று மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஒரே நேரத்தில் பெய்த மழையால் தக்காளிச் செடிகள் அழிந்தன. கர்நாடகா, ஆந்திராவில் தக்காளி விவசாயம் அதிகம். அதனால், தமிழகத்தில் தக்காளி விலை குறைந்தால் அங்கிருந்து தக்காளி விற்பனைக்கு வரும். விலையும் ஓரளவு கட்டுக்குள் இருக்கும். ஆனால் கர்நாடகா, ஆந்திராவில் இந்த முறை கனமழை பெய்ததால் அங்கு விளைந்த தக்காளி அம்மாநிலத் தேவைக்கே போதுமானதாக இல்லை. தமிழகத்தில் சாகுபடி செய்த தக்காளி அறுவடைக்கு வரவில்லை. அதனால், தக்காளி விலை ₹200-ஐ தாண்டியது. இந்நிலையில், தக்காளி அறுவடை தொடங்கியும் விலை குறையவில்லை என்றனர்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குன பாத்திமா கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் 13 ஆயிரம் ஹெக்டரில் தக்காளி சாகுபடி செய்யப்படும். கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரம் ஹெக்டரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பருவத்திற்கு வந்த செடிகளில் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. தினசரி 40 டன் தக்காளி தர்மபுரி மாவட்டத்தில் அறுவடை செய்யப்படுகிறது. உள்ளூர் தேவைக்கு போக வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு தக்காளி அனுப்பி வைக்கப்படுகிறது என்றார்.

The post மாவட்டத்தில் தினசரி 40 டன் தக்காளி அறுவடை appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சிகிச்சைக்காக வந்தபோது நெருக்கம்...