×

மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை

சென்னை: ‘‘மார்கண்டேய நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனை காக்கவும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணைக் கட்டியுள்ளது பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. மார்கண்டேய நதி கர்நாடகத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பெண்ணையாற்றில் கலக்கும் ஒரு சிறு கிளை நதியாகும். 2017ல் மத்திய நீர்வள குழுமத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்த போது கர்நாடக அரசு அப்பகுதியில் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்காகவும்  சுமார் 0.5 டி.எம்.சி கொள்ளவு உள்ள ஒரு அணையை கட்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2019ல் இந்த அணை அநேகமாக கட்டி முடிந்து விட்டதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடகாவின் இச்செயலை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது.உச்சநீதிமன்றத்தில் 18.5.2018ல் ஒரு அசல் வழக்கும், ஒரு இடைக்கால மனுவும் தாக்கல் செய்ததன் பேரில் உச்சநீதிமன்றம் 14.11.2019 அன்று அளித்த தீர்ப்பில் இப்பிரச்னைக்கு தீர்வு காண ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று ஆணையிட்டது. இந்த நடுவர் மன்றத்தை அமைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தி வந்துள்ளது. 29.6.2021 அன்று தமிழக அரசு மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பிய கடிதத்திலும் நடுவர் மன்றத்தை விரைவில் அமைக்க வலியுறுத்தியுள்ளது.இந்த அணையினால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் மார்கண்டேய நதியின் குறுக்கே நான்கு சிறு அணைகளினால் புஞ்சை பாசன வசதி பெறும் சுமார் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும்.  தமிழக அரசு விரைவில் நடுவர் மன்றத்தை அமைக்க தொடர்ந்து நடுவன் அரசை வலியுறுத்தும். நடுவர் மன்றத்தின் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு காணப்படும். மார்கண்டேய  நதியினை சார்ந்துள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நலனை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.* எடியூரப்பா கடிதத்துக்கு ஆணித்தரமாக பதில் அனுப்புவார் முதல்வர்மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே மேகதாது அணை கட்டப்படுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ‘‘மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். கூடி பேசலாம் என்ற முறையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்துக்கு தமிழகத்தின் கருத்துக்களை ஆணித்தரமாக அறிவித்து முதல்வர் பதில் அனுப்புவார்’ என கூறியுள்ளார்….

The post மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகா அரசு அணை தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Tamil ,Nadu ,Karnataka Government ,Markandeya River ,Minister ,Duraimurugan ,Chennai ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...