×

மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குட்டையை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரம், ஜூன் 8: மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குட்டையை தூர்வாரி சீரமைக்க வேண்டுமென  பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாமல்லபுரம் திருக்குளத் தெருவை ஒட்டி சுமார் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குட்டை ஒன்று உள்ளது. இந்த, குட்டையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தற்போது காட்சி பொருளாக மாறி உள்ளது.  குட்டையில், கோரை புற்கள், செடி கொடிகள் முளைத்து பாசி படர்ந்து, பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது. இதில், பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள் அதிகளவில் உற்பத்தியாகி உலா வருகிறது. மேலும், பாம்பு,  உள்ளிட்ட விஷ ஜந்துகள் அருகில் உள்ள வீடுகளுக்குள் படையெடுப்பதால் அப்பகுதி மக்கள் ஒரு வித அச்சத்துடன் வாழ்கின்றனர். கடந்த, சில மாதங்களுக்கு முன்பு குட்டைக்கு அருகில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட், தங்கும் விடுதிகளிலிருந்து  வெளியேறிய கழிவு நீர் குட்டையில் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதி முழுவதும் கடும் தூர் நாற்றம் வீசுகிறது. மேலும், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மூக்கை பொத்தியபடி சென்று வருகின்றனர். அருகில், உள்ளவர்கள் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைத்தால் கூட அதில் கிடைக்கும் தண்ணீரும் சாக்கடை நாற்றம் வீசுவதால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்த குட்டைக்கு மழை நீர் செல்வதற்காக கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல கட்டப்பட்ட கால்வாய்களை ஒரு சிலர் ஆக்கிரமித்து, கழிவு நீர் விட பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்த குட்டையில்  கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பொது மக்களை கடிப்பதால் பல்வேறு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் 100 ஆண்டு கடந்த குறநாட்டு குட்டையை போர்க்கால அடிப்படையில் தூர் வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென  பேரூராட்சி நிர்வாகத்திடம்  கோரிக்கை வைத்துள்ளனர்….

The post மாமல்லபுரத்தில் 100 ஆண்டுகள் பழமையான குறநாட்டு குட்டையை தூர்வார வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்