×

மானாமதுரை அருகே தொடர்மழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம்: முழு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

மானாமதுரை: மானாமதுரை அருகே அறுடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகிவிட்டன. சேதமான பயிர்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி மேலப்பிடாவூர், இலந்தைகுளம், உடைப்பங்குளம், பீக்குளம், செய்யாலூர், புதுக்குளம், விளாக்குளம், கொன்னக்குளம், சூரக்குளம், மறவனேந்தல், புளியங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் நடந்து வருகிறது. நேரடி விதைப்பு மூலமும், கிணற்று பாசனம் நடவு முறையிலும் நெற்பயிர்களை நட்டு வளர்த்து வந்தனர்.மானாமதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கின. விவசாயிகள் தண்ணீரை வெளியேற்ற முயன்றும் முடியவில்லை. இதனால் ஒரு வாரமாக வயல்களில் இருந்த பயிர்கள் அழுக துவங்கியுள்ளன. சுமார் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.விவசாயிகள் கூறுகையில், ‘‘தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. நடவுமுறை என்பதால் உழவு, உரம், களையெடுத்தல், பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளோம். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்து பயிர் இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

The post மானாமதுரை அருகே தொடர்மழையால் ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நாசம்: முழு இழப்பீடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Dinakaran ,
× RELATED 15 வயது மகள் காதல் கண்டித்த தந்தை கொலை: காதலன், நண்பர் கைது