×

மாநகரில் தானியங்கி கண்காணிப்பு கேமரா: இரவில் தப்பும் வாகனங்களை பிடிக்க திட்டம்

கோவை, ஜூலை 23: கோவை நகரில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. 8 பிரதான ரோடுகள், தேசிய, மாநில ரோடு, மாநகராட்சி ரோடுகள், சிக்னல், பொது இடங்கள், மக்கள் நடமாட்டம் மிகுந்த பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட், கடை வீதி உள்பட பல்வேறு இடங்களில் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிக்க கண்காணிப்பு கேமரா முக்கிய ஆதாரமாக இருக்கிறது. போலீசார் கட்டுப்பாட்டு அறையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பகுதிகளை கண்காணித்து வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியிலும், போலீசார் குறிப்பிட்ட சில வீதிகளையும் கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கின்றனர். குடியிருப்பு சங்கங்கள், தனியார் அமைப்புகள், வணிகர்கள் உதவியுடன் சில இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நகரில் உள்ள சில கேமராக்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை. பழுதான நிலையில் செயல்படாமலும், சில இடங்களில் வாகனங்களின் எண் தெரியாத அளவிற்கும் கேமராக்கள் இருப்பதாக தெரிகிறது. பொது இடங்களில் உள்ள கேமராக்களை சரியாக முறையாக பராமரிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் பராமரிப்பு அரிதாகவே நடக்கிறது. இரவு நேரத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய வாகனங்களை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது. சுங்க சாவடிகளில் வாகனங்களின் பதிவு எண் கண்டறிய தானியங்கி பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் (ஏஎன்பிஆர்) பயன்பாட்டில் இருக்கிறது. இதை போல, நகரில் பொது இடங்களிலும் தானியங்கி பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் அமைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நகரில் இந்த கேமராக்கள் வாங்கவும், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நவீன தொழில் நுட்ப கேமராக்கள் வந்தால், விபத்து, திருட்டு போன்றவற்றில் தொடர்புடைய வாகனங்களை எளிதில் மடக்கி பிடிக்க முடியும். தானியங்கி வாகன பதிவு எண் கண்டறியும் கேமராக்கள் நகரின் முக்கிய ரோட்டில் அமைக்க தேவையான முயற்சி எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post மாநகரில் தானியங்கி கண்காணிப்பு கேமரா: இரவில் தப்பும் வாகனங்களை பிடிக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு பற்றி தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரேமலதா பேட்டி