×

மாநகராட்சி மாடல் சிட்டி திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய ரவுண்டானா அமைகிறது-பிளாஸ்டிக் கூம்புகள் வைத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியின் மாடல் சிட்டி திட்டத்தில் அரசு மருத்துவமனை சந்திப்பில்  புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதையடுத்து தற்போது சோதனை முயற்சியாக, ரவுண்டானா  அமைய உள்ள இடத்தில் பிளாஸ்டிக் கூம்புகள் வைத்து போக்குவரத்தை நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாநகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவமனை சந்திப்பில் 3 சாலைகளை இணைக்கும் வகையில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு, கடந்த 2018ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தால் 50 சதவீதம் மட்டுமே போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், மேம்பாலத்தின் கீழ் உள்ள ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் மீனாட்சி சுந்தரனார் சாலை (பிரப் சாலை), ஈ.வி.என். சாலை, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, நசியனூர் சாலை என 5 சாலைகள் இணையும் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இதையடுத்து மாவட்ட காவல் துறை சார்பில் தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்டு, போக்குவரத்து போலீசார், ஆயுதப்படை போலீசார் மூலம் வாகன போக்குவரத்தினை ஒழுங்கு படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனை சந்திப்பில் தற்காலிக ரவுண்டானாவிற்கு நிரந்தர தீர்வாக, புதிய ரவுண்டானா அமைக்க காவல்துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம் மாடல் சிட்டி திட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய ரவுண்டானா அமைக்க ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது. இதன்பேரில், புதிய ரவுண்டானா அமைப்பதற்கு, ஏற்கனவே இருந்த தற்காலிக ரவுண்டானா அகற்றப்பட்டது. மேலும், தற்போது, புதிய ரவுண்டானா அமைய உள்ள இடங்களில் பிளாஸ்டிக் கூம்புகள் மற்றும் பேரி கார்டுகள் வைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி மாடல் சிட்டி திட்டத்தில் அரசு மருத்துவமனை சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது சோதனைக்காக ரவுண்டானா அமைய உள்ள இடத்தில் பிளாஸ்டிக் கூம்புகள் வைத்து போக்குவரத்தை ஆய்வு செய்து வருகிறோம். இந்த சோதனை ஒரு வாரம் செய்யப்படும். பின்னர், ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவை செய்யப்பட்டு, புதிய ரவுண்டானா அமைக்கப்படும். ரவுண்டானா அமைய இடம் மட்டுமின்றி அதன் தொடர்ச்சியான 5 சாலைகளிலும் சாலை பாதுகாப்பு, பாதசாரிகள் சாலையை கடக்க ஜிப்ரா கிராசிங் போன்றவை அமைக்கப்படும். பின்னர், தனியார் ஸ்பான்சர் செய்தால், ரவுண்டானாவில் வாட்டர் பால்ஸ், நினைவு சின்னங்கள் போன்றவை அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.குடிநீர் குழாய் பதிக்கும் பணி துவக்கம்ஈரோடு அரசு மருத்துவமனை சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைய உள்ளதை தொடர்ந்து, அப்பகுதியில் மாநகராட்சியின் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள றிவுறுத்தப்பட்டது. இதன்பேரில், அரசு மருத்துவமனை சந்திப்பில் நேற்று பொக்லைன் வாகனம் மூலம் குழிகள் தோண்டப்பட்டு, குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து வரும் குடிநீர் குழாயுடன், நசியனூர் சாலை மற்றும் மீனாட்சி சுந்தரனார் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயுடன் இணைப்பு கொடுக்கப்படவில்லை. தற்போது, இப்பணிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளதால், பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன. மேட்டூர் சாலை வழியாக வரும் குடிநீர் குழாயில் இருந்து நசியனூர் சாலைக்கும், மீனாட்சி சுந்தரனார் சாலைக்கும் குழிகள் தோண்டி குழாய்கள் பதித்து இணைப்புகள் கொடுக்கப்பட உள்ளது’’ என்றனர்….

The post மாநகராட்சி மாடல் சிட்டி திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் புதிய ரவுண்டானா அமைகிறது-பிளாஸ்டிக் கூம்புகள் வைத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Model City ,Erode ,Erode Corporation ,Model City Project ,Highway Department ,Dinakaran ,
× RELATED அணைக்கட்டில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி