×

மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, ஏப். 13: சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார் சென்னை மாநகராட்சியில் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி தொடக்கவிழா சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சியை தொடங்கி வைத்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும், கிரிக்கெட் பயிற்சியளிக்கும் ஜெனரேசன் நெக்ஸ்ட் கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ப்ரீத்தி அஸ்வினிடமும், கால்பந்து பயிற்சியளிக்கும் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை நிறுவனத்தின் இயக்குநர்கள் பிரியா கோபாலன் மற்றும் சந்தியா ராஜன் ஆகியோரிடமும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், மேயர் பிரியா தலைமையில் நடந்த விழாவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின், இந்திய நாட்டிற்கான பிரெஞ்சு நாட்டின் துணை தூதர் லிசா டால்பட் பாரே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் துணை மேயர் மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, மாமன்ற ஆளுங்கட்சி தலைவர் நா.ராமலிங்கம், நிலைக்குழு தலைவர்கள் தனசேகரன் (கணக்கு), பாலவாக்கம் விஸ்வநாதன் (கல்வி), கோ.சாந்தகுமாரி (பொது சுகாதாரம்), இளைய அருணா (நகரமைப்பு) மண்டலக்குழு தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சிட்டீஸ் என்ற சிறப்பு திட்டத்தின் வாயிலாக சென்னை மாநகராட்சி பள்ளிகளை புதுமை மற்றும் மாதிரி பள்ளிகளாக தரம் உயர்த்தி மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சி குறிப்பிட்ட பள்ளிகளை தேர்ந்தெடுத்து, அப்பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், மின் ஆளுமையாக மாற்றியமைத்தல், கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு முறையாக பயிற்சி அளித்தல், கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போன்ற முக்கிய கூறுகளை மேம்படுத்த ரூ.95.25 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, விளையாட்டுகளில் மாணவர்களின் ஈடுபாடு மற்றும் பங்கினை அதிகரிக்க ஏதுவாக சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் பயிற்சி, ரூ.19 லட்சம் மதிப்பில் ஜெனரேசன் நெக்ஸ்ட் அகாடமியின் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் வழிகாட்டுதலின்படி வழங்கப்பட உள்ளது. கால்பந்து பயிற்சி ரூ.8 லட்சம் மதிப்பில் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை என்கிற கால்பந்து பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

The post மாநகராட்சியின் சிட்டீஸ் திட்டத்தின் கீழ் சென்னை பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து பயிற்சி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Minister ,Udayanidhi Stalin ,
× RELATED நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட...