×

மலைப்பாதையில் விழும் மூங்கில் மரங்களால் போக்குவரத்து பாதிப்பு

சேந்தமங்கலம், ஏப்.21: கொல்லிமலை பிரதான மலைப்பாதையில், மூங்கில் மரங்கள் சாய்வதால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து அபாயம் அதிகரித்து வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலைக்கு செல்ல அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட பிரதான மலைப்பாதை உள்ளது. காரவள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து சுமார் 10 கொண்டை ஊசி வளைவுகள் வரை சாலைகளின் இரு மடங்கிலும் மூங்கில் மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. நாள் பட்ட மரங்கள் வயது முதிர்வால் சுட்டெரிக்கும் வெயிலுக்கு அடியோடு காய்ந்து வருவதால் டெண்டர் விடப்பட்டு வெட்டப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வேகமாக காற்று அடிக்கும் போது, பிரதான சாலையில் சாய்ந்து விழுகிறது. இதனால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நேற்று 4வது கொண்டை ஊசி வளைவில், ஒரு மூங்கில் மரம் பலத்த காற்றுக்கு சாலையில் சரிந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்த தகவலின்பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் கொண்டு சாய்ந்த மூங்கில் மரங்களை அப்புறப்படுத்தினர். இருந்தபோதிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மலைச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கொல்லிமலை வாசிகள் கூறுகையில், ‘கொல்லிமலை பிரதான சாலையோரத்தில் உள்ள மூங்கில் மரங்கள், அடிக்கடி சாலையில் சாய்ந்து விழுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி, சாலைகளின் இருபுறமும் உள்ள மூங்கில் மரங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும். வனப்பகுதிக்குள் மூங்கில் மரங்களை நடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

The post மலைப்பாதையில் விழும் மூங்கில் மரங்களால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Senthamangalam ,Kollimalai ,Dinakaran ,
× RELATED காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு