மலைப்பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்க 5 லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணி கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டத்தில்

வேலூர், செப். 26: வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் 5 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பணியை கலெக்டர், எம்எல்ஏக்கள், மேயர் ஆகியோர் பங்கேற்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் 5 லட்சம் விதைப்பந்துகளை தூவும் பணிகளை கலெக்டர் சுப்புலட்சுமி மேற்கொண்டார். அதன்படி, சமூக ஆர்வலர்களுடன் இணைந்து கடந்த 3 மாதங்களாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இருந்து 200-300 வருட பழமையான மரங்களில் இருந்து விழுந்த நாட்டு ரக விதைகள் 5 லட்சம் சேகரிக்கப்பட்டது. நீர் மருது, தான்றி, நாவல், அத்தி, அரசன், வேப்பம், சந்தனம் போன்ற மரங்கள் மலைகளில் பெரும்பாலும் வளரக்கூடியவை. வேலூர் மலைகளில் மரங்களை நட்டு வளர்த்தால் பசுமையான சூழல் ஏற்பட்டு மழை பொழிவை உண்டாக்கி, வெட்பம் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.

கடந்த 10ம் தேதி காட்பாடி ஆக்சிலியம் கல்லூரியில் சேகரிக்கப்பட்ட 5 லட்சம் விதைகளை கொண்டு 5 லட்சம் விதைப்பந்துகளை தயாரிக்க பணியில் 3,000 மாணவிகளை ஈடுபட்டனர். மேலும் தயாரித்த 5 லட்சம் விதைப்பந்துகளை வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைகளில் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் தீர்த்தகிரி மலை, தொரப்பாடி மலை, குடியாத்தம் உள்ளி மலை, கே.வி.குப்பம் வடுகந்தாங்கல் முருகர் மலை ஆகிய இடங்களில் தலா 25,000 விதைப்பந்துகள் வீதம் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் விதை பந்துகள் ஊரக வளர்ச்சி துறை, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியோடு தூவப்பட்டது.

வேலூர் தீர்த்தகிரி மலைப்பகுதியில் விதை பந்தகளை தூவும் பணியை நேற்று கலெக்டர் சுப்புலட்சுமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, தொரப்பாடி மலைப்பகுதியில் விதைப்பந்துகளை தூவும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த மலைப்பகுதியில் 25,000 விதைப்பந்துகள் முத்துரங்கம் மற்றும் டிகேஎம் கல்லூரிகளில் பயிலும் 100 மாணவ, மாணவிகள் மூலம் தூவப்பட்டது. இதேபோல், குடியாத்தம் உள்ளி மலை, கே.வி.குப்பம் தாலுகாவில் வடுகந்தாங்கல் மலைப்பகுதிகளில் தலா 25 ஆயிரம் விதை பந்துகள் தூவப்பட்து. இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா, மண்டலக்குழுத் தலைவர் நரேந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மாநகராட்சி கமிஷனர் ஜானகி, ஆர்டிஓக்கள் பாலசுப்பிரமணி, சுபலட்சுமி, சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post மலைப்பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்க 5 லட்சம் விதைப்பந்துகள் தூவும் பணி கலெக்டர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: