×

மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு சர்ச்சை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: மருத்துவ மேற்படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு 10 சதவீதமும், இதர பிறப்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் கூடுதலாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ‘தேசிய தேர்வுகள் முகமை’ கடந்த ஜூலை 30ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தொடர்ந்த பொதுநலன் மனுவும், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஒன்றிய அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது நடந்த வாதம் வருமாறு: மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள்: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்பு நிர்ணயித்தது அபத்தமானது. 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பது என்பதும் சரியானது இல்லை. காரணம், கேரளா போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பை கவனித்தால் ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பது என்பது நிச்சயம் இயலாத ஒன்று. சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் ஒரு குடியிருப்பில் வசிப்பது என்பது முற்றிலும் வேறானது. மேலும், 7வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி 4ம் பிரிவு ஊழியர்களின் மாத வருமானம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. எனவே, ரூ.8 லட்சம் வருமான வரம்பில் நியாயமான ஒரு காரணத்தை கூட ஒன்றிய அரசு வழங்கவில்லை.துஷார் மேத்தா (ஒன்றிய அரசு சொலிசிட்டர் ஜெனரல்): கலந்தாய்வு விதிமுறைகளில் திடீரென மாற்றம் கொண்டு வரப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. நீட் தேர்வுக்கான தேதி மார்ச் மாதம் என அறிவிக்கப்பட்ட சூழலில், அதற்கு முன்பாகவே கடந்தாண்டு பிப்ரவரி மாதமே கலந்தாய்வு விதிமுறைகள் வெளியிடப்பட்டது. ஓபிசி இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஆகியவை சட்டத்துக்கு புறம்பாக திடீரென உருவாக்கப்பட்டது போல் வாதிடப்படுகிறது. அது, அப்படி இல்லை. பின்தங்கிய வகுப்பினரை கைதூக்கி விடுவதற்காக ஒன்றிய கல்வி நிலையங்களில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் (திமுக): இடஒதுக்கீடு விவகாரத்தில் எம்பிபிஎஸ் சேர்க்கையில் நாம் அடிப்படையில் இருந்து தொடர வேண்டும். வெறும் மதிப்பெண்களை மட்டுமே வைத்துக் கொண்டு தகுதியை தேட முடியாது. முக்கிய இடஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்குவது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள சட்டங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். அதில் மேற்படிப்பு, இளநிலை மருத்துவ படிப்பு என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. அதனால், நடப்புாண்டில் ஓபிசி.க்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. இதில், இதர பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு கொடுக்க விரும்பினால் ஒரு குழுவை அமைத்து அதன் ஆய்வுப்படி அடுத்த கல்வியாண்டு முதல் வழங்கலாம் என்று கடந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது.நீதிபதிகள்: அப்படி என்றால், நீங்கள் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்கிறீர்களா?வில்சன்: இல்லை, அசல் பிரமாணப் பத்திரத்தில் வருமான உச்சவரம்பு ரூ.8லட்சம் என உள்ளது. ஆனால், இது வேறுபட்டதாகும்.மூத்த வழக்கறிஞர் மரிய அற்புதம் (தமிழக அரசு): மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி மேற்படிப்பில் இடஒதுக்கீடு அமலாகாது என்பது அறிந்த ஒன்றுதான். அவ்வாறு இருக்கும் போது அனைத்து மருத்துவ மேற்படிப்புகளையும் சூப்பர் ஸ்பெசியாலிட்டி என மனுதாரர் கூறுவதும், இடஒதுக்கீடு அமலாகாது என்று தெரிவிப்பதும் ஏற்க கூடியது கிடையாது. அது தவறான ஒன்று. இவ்வாறு வாதங்கள் நடந்தது.பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதல் இடஒதுக்கீட்டை ஒவ்வொரு மாநிலத்திற்கும் வழங்க வேண்டும் என்பதை எப்படி தீர்மானம் செய்ய முடியும் ? நாங்கள் அப்படி பார்க்க முடியாது. நீதிமன்றத்தை பொருத்தவரையில் அனைவரும் சமம். நமது நாட்டின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டியது முக்கியமான ஒன்றாக உள்ளது. அது குறித்த உத்தரவு நாளை (இன்று) பிறப்பிக்கப்படும்,’ என அறிவித்தனர்….

The post மருத்துவ மேற்படிப்பு இடஒதுக்கீடு சர்ச்சை: உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Dinakaran ,
× RELATED எதிர்கட்சிகளின் அழுத்தம், சுப்ரீம்...