×

மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை கண்ணகி நகரில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்நகல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியா முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்ட கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு, இப்போது கூடுதலான தேவைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த மாதம் 29ம் தேதி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நேற்று) 50 இடங்களில் காலை 9.30 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது. இம்மருத்துவ முகாம்களில் பல்வேறு மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.  மருத்துவக் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் ஊக்கத் தொகைகள் வழங்கவும் முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அந்தத் துறையில் உள்ள அனைவரையும் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகைகள் கொடுத்தால் ரூ.400 கோடி செலவிட நேரிடும். எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்ட உண்மையானவர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரக் காலத்துக்குள் அப்பணி முடிந்துவிடும். மருத்துவக் களப்பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைகள் வழங்குவதைத் முதல்வர் தொடங்கி வைக்க இருக்கிறார். இப்போது நடைபெறுகிற ஆட்சியில் வெளிப்படைத்தன்மையுடன் பணியிட மாற்றம் வழங்கப்படுகிறது. இதனால் கிட்டத்தெட்ட 6,300 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டு பயன் அடைந்துள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவுட் சோர்சிங், கான்ராக்ட் முறையில் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி வரன்முறைப்படுத்துவது என்பது இயலாது. அவர்களை துறைவாரியாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தற்போது தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் பணியாற்றுகிற தற்காலிக பணியாளர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு ரூ.87 கோடி கூடுதலாக செலவிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.* டெங்குவை கட்டுப்படுத்த பன்முக நடவடிக்கைடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கட்டுமான உரிமையாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நேற்று நடந்தது. அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழக அரசு மேற்கொண்டுவரும் பன்முக தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய்கள் பரவாமல் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக கொசுவினால் பரவும் நோய்கள் குறிப்பாக டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 3,090 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்பொழுது தமிழகத்தில் 362 பேர் மட்டுமே டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்….

The post மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைக்கிறார்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Minister of Public Welfare ,Varumun ,Kannagi Nagar ,Subramanian ,Dinakaran ,
× RELATED பொய் தகவல் மூலம் மக்களிடம் பதற்றத்தை...