×

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? # Doctor Vs Patient

நன்றி குங்குமம் டாக்டர்மருத்துவர்களை மதிக்க வேண்டிய கடமை நோயாளிக்கு உண்டு. அதேபோல் நோயாளிக்கு உரிய சிகிச்சை அளித்து பாதுகாக்க வேண்டிய கடமை மருத்துவருக்கும் உண்டு. இரு உறவுகளும் இணக்கத்துடன் இருக்கும் வரையில்தான் சமூகத்தின் இயக்கம் சரியாக இருக்கும். ஆனால், அவ்வப்போது இந்த நோயாளி, மருத்துவர் உறவில் பெரிய சர்ச்சைகளும், சமாதானப்படுத்தவே முடியாத அளவுக்கு சண்டைகளும் வந்துவிடுவதுண்டு. கொல்கத்தா என்.ஆர்.எஸ் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் அளித்த சிகிச்சையினால் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 10ம் தேதியன்று உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பணியில் இருந்த 2 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த நோயாளியின் உறவினர்களால் தாக்கப்பட்டார்கள். இது மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் மட்டுமல்லாது, நாடு தழுவிய போராட்டமாகவும் மாறியது. அதன்பிறகு மேற்கு வங்க முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டு, இயல்பு நிலை திரும்பியது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கவும், நோயாளி மருத்துவர் உறவு சுமூகமாக இருக்கவும் என்ன வழி என்று பொது நல மருத்துவர் புகழேந்தியிடம் பேசினோம்…‘‘மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்; சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் உயிரிழந்துவிட்டார். மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் அவர் இறந்தார் என்று கூறி, அதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள் அங்கு பணியில் இருந்த பணி மருத்துவர்கள் இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி இளநிலை பணி மருத்துவர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்ததால் நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு செல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்தார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களை மிரட்டும் தொனியில் முதல்வர் எச்சரிக்கை செய்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் நாங்கள் ஒட்டுமொத்தமாக பணியை ராஜினாமா செய்வோம். மேலும் எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று இளநிலை மருத்துவர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் தத்தா தெரிவித்தார். இந்தப் போராட்டத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் இந்திய மருத்துவ கூட்டமைப்பும் ஆதரவு தெரிவித்தது. இதனால் இந்தப் போராட்டம் நாடு தழுவிய அளவில் பரவலானது. மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த குற்றத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்வது, அவர்களுக்கு தண்டனை அளிப்பதை உறுதி செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்தது. ;இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பேச்சு வார்த்தைக்கு வருமாறு மாநில முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அந்த பேச்சு வார்த்தையில் மருத்துவர்கள் சார்பில் 31 பேரும், தலைமைச் செயலாளர், மாநில காவல்துறை தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் பணியிடங்களில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார். ஒவ்வொரு மருத்துவமனையிலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். மருத்துவர்களின் பிரச்னைகளைப் போக்க குறைதீர் மையம் புதிதாக அமைக்கப்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார். ;மேலும் இதுவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட எந்த மருத்துவர்கள் மீதும் எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும், மருத்துவமனையில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார். இப்படி பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் குறைதீர் மையங்களை அமைப்பதால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாது. ;கொல்கத்தாவில் பணி மருத்துவர்கள் இருவர் தாக்கப்பட்டார்கள் என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செய்திகள் வந்துள்ளது. ஆனால், அந்த நோயாளியின் இறப்புக்கு அங்குள்ள மருத்துவர்களின் கவனக்குறைவு காரணமா, மருத்துவர்கள் சரியாக கவனிக்கவில்லையா, மருத்துவர்கள் ஏன் தாக்கப்பட்டார்கள் என்பது பற்றி ஊடகங்களில் செய்திகள் வெளியாகவில்லை. இதுபோன்ற நிகழ்வுகளைப் பற்றிய முழுமையான தகவல்களை சேகரித்து வெளியிட வேண்டிய முக்கியமான பங்கு ஊடகங்களுக்கு உள்ளது.மருத்துவர்களைத் தாக்குவது எந்தவிதத்திலும் எப்படி நியாயப்படுத்த முடியாதோ அதேபோல் அலட்சியத்தால் ஏற்படும் நோயாளியின் உயிரிழப்பும் நியாயப்படுத்த முடியாதது.; ஒருவருக்கு ஏற்பட்டுள்ள நோய், நோயின் நிலை மற்றும் நோயாளியின் உடல் நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த விவரங்களை அந்த நோயாளியிடமோ அல்லது அவருடன் வந்திருக்கும் உறவினர்களிடமோ தெரிவிக்க வேண்டியது சட்டப்படி மருத்துவரின் கடமை. அதேபோல நோயாளிக்கு கொடுக்கப்படும் சிகிச்சை, அந்த சிகிச்சையால் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை சட்டப்படி நோயாளிக்கு உள்ளது. ஒருவேளை நோயாளியின் நிலை மிகவும் மோசமாகி மரணம் ஏற்படும் என்றால் அதையும் அவர்களிடம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவுபடுத்த வேண்டியதும் மருத்துவரின் கடமை. இப்படி சரியான நேரத்தில் இதுபோன்ற தகவல்களை மருத்துவர்கள் தெரிவித்திருந்தால், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற நிகழ்வுகளை தவிர்த்திருக்க முடியும். குறிப்பாக தீவிரமான நோய்க்குறி உள்ளவர்களை உரிய கல்வித்தகுதியும், அனுபவமும் வாய்ந்த மருத்துவர்கள் கையாள வேண்டும். இதற்கு மாறாக போதிய அனுபவம் இல்லாத பயிற்சி மருத்துவர்களோ அல்லது செவிலியர்களோ கையாளும்போது நோயாளி கடுமையாக பாதிக்கப்படுவார்.இது நோயாளி தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தவே செய்யும். இதை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும். போதிய மருத்துவர்கள் இல்லாத போது அதை சமாளிக்க இதுபோன்ற தவறான வழிகளையும் சில மருத்துவமனைகள் கையாள்கின்றன. இந்நிலையை மாற்ற மருத்துவர்கள் பற்றாக்குறையையும் சரி செய்ய வேண்டியுள்ளது.நோயாளி-மருத்துவர் இடையே நல்ல புரிதலுடைய உறவு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த உறவு நோயாளி மருத்துவர் இடையே பரஸ்பரம் எல்லா கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ளும்படி இருக்க வேண்டும். ஆனால் பல; இடங்களில் இதுபோன்ற கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுவதில்லை. இந்த கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி வருகிறபோது அது மருத்துவர் மீது நம்பிக்கையில்லாத நிலைக்கு செல்வதோடு, உணர்ச்சிவசப்பட்டு தாக்குதல் நடத்தும் நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. நோயாளிக்கு மருத்துவர் மீதான நம்பிக்கை குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் மேற்சொன்ன அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்க முடியும்.’’– க.கதிரவன்

The post மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லையா? # Doctor Vs Patient appeared first on Dinakaran.

Tags : Saffron ,
× RELATED 16 வயதில் ஸ்டாடர்டப் நிறுவனம்!