×

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.194.65 கோடியில் கட்டிடங்கள், மருத்துவ கருவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனையில் ரூ.194.65 கோடியில் புதிய கட்டிடங்கள் திறந்து வைத்து, மருத்துவ கருவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். எழும்பூர் மண்டல கண் மருத்துவ இயல் நிலையம் மற்றும் அரசு கண் மருத்துவமனை ஆசியாவில் நிறுவப்பட்ட முதல் கண் மருத்துவமனை. இந்த மருத்துவமனை கட்டப்பட்டு 2019ம் ஆண்டில் இருநூறு ஆண்டுகள் நிறைவடைந்தன. தற்போதுள்ள மருத்துவமனை கட்டிடம் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமானதாக இல்லாததால், ரூ.65.60 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களுடன் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் 150 படுக்கை வசதிகளுடன், புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, கருவிழி சிகிச்சை பிரிவு, கண்குழி சிகிச்சை பிரிவு, விழித்திரை சிகிச்சை பிரிவு, உள் கருவிழி சிகிச்சை பிரிவு மற்றும் கண் நரம்பு இயல் மாற்றுக்கண் சிகிச்சை பிரிவு போன்ற சிறப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ கல்வி இயக்ககம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறை, மருந்து கட்டுப்பாடு ஆகிய துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள மருத்துவ துறை கட்டிடங்களை திறந்து வைத்து, மருத்துவ கருவிகளை பயன்பாட்டிற்காக வழங்கி மொத்தம் ரூ.129.20 கோடி மதிப்பீட்டிலான மருத்துவ துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் திறந்து வைத்தார். மேலும், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் இடமாற்றத்தை எளிதாக்கும் வகையில் ரூ.1.30 கோடியில் ஸ்டிரெச்சருடன் கூடிய பேட்டரி கார்கள், 74 சிறப்பு பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவுகளுக்கு குறை பிரசவ இறப்பை குறைக்க ரூ.15 கோடி மதிப்பிலான 150 பிறந்த குழந்தைகளுக்கான வென்டிலேட்டர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையம், முதன்மை மற்றும் 2ம் நிலை மருத்துவமனைகளுக்கு ரூ.49.15 கோடியில் புதிய உயர்நிலை வண்ண அல்ட்ராசவுண்ட் இயந்திரங்கள் என மொத்தம் ரூ.65.45 கோடியில் மருத்துவ சேவை ஊர்திகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகளை அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.தொடர்ந்து, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் பொது சுகாதார துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 152 களப்பணி உதவியாளர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 76 மருந்தாளுநர்கள் மற்றும் தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 திறன்மிகு உதவியாளர் நிலை-2 மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துறையில் கருணை அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர், ஒரு ஊர்தி ஓட்டுநர் என மொத்தம் 236 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன், மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் பரந்தாமன், பிரபாகர ராஜா, மூர்த்தி, கிருஷ்ணசாமி, அசன் மவுலானா, எபினேசர், த.வேலு, துணை மேயர் மகேஷ்குமார், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் ஷில்பா  பிரபாகர் சதீஷ், சுகாதார திட்ட இயக்குனர் உமா, மருத்துவ பணிகள் கழக மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருந்து துறை இயக்குனர் கணேஷ், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர்  கிளாட்ஸ்டன் புஷ்பராஷ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.194.65 கோடியில் கட்டிடங்கள், மருத்துவ கருவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Department of Medicine ,People's ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Egmore Zonal Ophthalmology Center ,Government Eye Hospital ,Medical and People's Welfare Department ,
× RELATED கோத்ரா சம்பவத்தில் மோடி ராஜினாமா...