×
Saravana Stores

மரக்கூண்டில் அடைக்கப்பட்ட யானை ரிவால்டோவிற்கு காலர் ஐடி பொருத்தப்பட்டது: விரைவில் வனத்தில் விட நடவடிக்கை

கூடலூர்: நீலகிரியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டுள்ள யானை ரிவால்டோவிற்கு காலர் ஐடி பொருத்தப்பட்டுள்ளது. யானையை விரைவில் வனத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மசினகுடி ஊராட்சிக்குட்பட்ட மாவநல்லா வனப் பகுதி மற்றும் ஊருக்குள் சுற்றி வந்த   ரிவால்டோ என அழைக்கப்படும் 45 வயது ஆண் காட்டு யானைக்கு துதிக்கையில்  காயம் ஏற்பட்டது. இதனால் யானை வனப்பகுதியில் உணவு தேட முடியாமல்  குடியிருப்பு பகுதிகளுக்கு உணவு தேடி வந்தது.  இந்த யானைக்கு இப்பகுதி மக்களால் ஆபத்து ஏற்படலாம் என்று தொண்டு அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் கடந்த மே 5ம் தேதி வாழைத்தோட்டம் பகுதியில்   புகுந்த யானையை வனத்துறையினர் பிடித்து மரக்கூண்டில் அடைத்து சிகிச்சை அளித்து வந்தனர். யானையை வனத்தில் விட்டால் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து விடும் என்பதால் யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து யானை ரிவால்டோ வாழைத்தோட்டம் வனத்துறை சோதனைச்சாவடியை ஒட்டிய ஆற்றங்கரைப் பகுதியில் பிரத்யேக மரக்கூண்டு அமைத்து அதில் விடப்பட்டது. இந்த யானையை முகாமில் அடைத்து வைக்காமல் வனப்பகுதியில் சுதந்திரமாக நடமாட விட வேண்டும் என தொண்டு அமைப்பினர் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது இந்த யானையை முதுமலை புலிகள் காப்பகம் கார்குடி வனச்சரக பகுதியில் வனத்துறையின் கண்காணிப்புடன் வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இந்த யானை வனப்பகுதியில் விடப்படலாம் என்ற நிலையில்  மரக் கூண்டில் உள்ள யானைக்கு காலர் ஐடி பொருத்தியுள்ளனர்.இதில் 3 வருட பேட்டரி பேக்அப் உள்ளது. ஜிபிஎஸ் வசதி உடன் விஎச்எப் டிரான்ஸ்மிட்டர்ஸ் உள்ளதால் யானை வனத்தில் எங்குள்ளது என எளிதில் இன்டர்நெட் மூலம் கண்காணிக்க முடியும் என வனத்துறையினர் தெரிவித்தனர். விரைவில் யானையை வனப்பகுதிக்குள் கொண்டுவிட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்….

The post மரக்கூண்டில் அடைக்கப்பட்ட யானை ரிவால்டோவிற்கு காலர் ஐடி பொருத்தப்பட்டது: விரைவில் வனத்தில் விட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : CUDALUR ,Nilgiris ,
× RELATED இசிஆரில் செல்லும் மக்களுக்கு குட்...