×

மத சட்டங்களை திணிக்கக் கூடாது அரசியல் சாசனப்படியே இந்தியாவில் ஆட்சி நடக்கும்: உபி முதல்வர் யோகி பேட்டி

லக்னோ: ‘‘இந்தியாவில் அரசியல் சாசனப்படியே ஆட்சி நடக்கும். ஷரியத் சட்டத்தின்படி அல்ல. அரசு அமைப்புகள் மீது நமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளை திணிக்கக் கூடாது’’ என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து கல்வி நிறுவனங்களுக்கு வருவது தொடர்பான விவகாரம் விஸ்வரூபமாகியுள்ளது. அனைத்து மாணவர்களும் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிந்து வருவதற்கு மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான மனுக்கள் குறித்த விசாரணையும் நடந்து வருகின்றது. இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியா, அரசியல் சாசனப்படி ஆளப்படுமே தவிர ஷரியத் சட்டத்தின்படி அல்ல. நமது பிரதமர் மோடி, முத்தலாக் முறையை ரத்து செய்தார். இதனால் முஸ்லிம் மகள்களின் உரிமை காக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மரியாதையை மாண்பை பிரதமர் உறுதி செய்துள்ளார். அரசியல் சாசனப்படி இங்கு அனைத்து மகள்களும் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களின் மரியாதை, சுய விருப்பத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். நாட்டின் மீதும் அதன் அமைப்புகளின் மீது நாம் தனிப்பட்ட மத நம்பிக்கைகளை திணிக்க முடியாது. நான் உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களையும் காவி உடை அணியுமாறு நிர்பந்தப்படுத்த முடியுமா? முடியாதல்லவா? ஆகையால் பள்ளிகளில் சீருடை அவசியம். தேசம் அரசியல் சாசனத்தின்படி இயங்கும்போது பெண்களின் பாதுகாப்பும், மாண்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.* அப்போது உயிருடன் இருக்க மாட்டேன்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி, ‘இந்தியாவில் ஒருநாள் ஹிஜாப் அணிந்த பெண் பிரதமராவார்’ எனக் கூறியுள்ளது குறித்து ஆதித்யநாத் கூறுகையில், ‘‘அவரவர் விருப்பப்படி ஹிஜாப், நிகாப் அணிந்து பள்ளிக்குச் செல்லட்டும்… டாக்டர்களாகவோ, கலெக்டர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ ஆகட்டும். ஒருநாள், அப்போது நான் உயிருடன் கூட இல்லாமல் போகலாம், அன்று ஹிஜாப் அணிந்த ஒரு பெண் நமது பிரதமராகவும் ஆகட்டும்’’ என்றார்….

The post மத சட்டங்களை திணிக்கக் கூடாது அரசியல் சாசனப்படியே இந்தியாவில் ஆட்சி நடக்கும்: உபி முதல்வர் யோகி பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,Ubi Chief ,Yogi ,Lucknow ,
× RELATED ‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான...