×

உடன்பாடு ஏற்பட்ட சில மணிநேரத்தில் மீண்டும் போராட்டம்: கேரளா சென்ற டிப்பர்கள் சிறைபிடிப்பு

குலசேகரம்: குமரி  மாவட்ட லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், பொது மக்கள் இணைந்து கடந்த 30ம்  தேதி கனிம வளங்களுடன் கேரளா சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தினர். மேலும்  உள்ளூர் வாகனங்களுக்கு கல், ஜல்லி, எம்சான்ட் தராத கிரஷர் மற்றும்  குவாரிகளை பொது மக்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பான போராட்டம் தொடர்ந்து 3 நாட்கள் நீடித்தது.  இதையடுத்து நேற்று மாலை நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி கல், ஜல்லி, எம்சாண்ட்  ஆகியவற்றின் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு கிரஷர், குவாரி  உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து  போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி லாரி, டெம்போக்கள் ஓட தொடங்கின.

  இன்று காலை வழக்கம் போல் உள்ளூர் டெம்போக்களில் கிரஷரில் கல்  எடுக்க சென்றனர். ஒரு சில கிரஷர்களில் மீண்டும் உள்ளூர் லாரி, டெம்போ போன்ற  வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கேரள பதிவெண் கொண்ட வாகனங்களில்  பொருட்கள் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனால் கிரஷர் உரிமையாளர்களுக்கும்,  லாரி, டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம்  ஏற்பட்டது.
இதைதொடர்ந்து வலியாற்றுமுகம் பகுதி வழியாக கேரளாவுக்கு  கனிமங்கள் கொண்டு சென்ற வாகனங்கள் சிறைபிடிக்கப் பட்டன. அதோடு உள்ளூர்  லாரிகள் மற்றும் டெம்போக்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

தொடர்ந்து மீண்டும்  வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 3 நாள் போராட்டத்துக்கு பின்  வாகனங்கள் ஓடத்தொடங்கிய சில மணிநேரத்திலேயே மீண்டும் வேலை நிறுத்த  போராட்டம் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தகவல் அறிந்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அங்கு சென்று லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்து வைத்திருந்த கேரள பதிவெண் கொண்ட 2 லாரிகளை மீட்டு வந்தனர்.

பின்னர் அனுமதி இல்லாமல் கேரளாவுக்கு கனிமம் கொண்டு செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று லாரி மற்றும் டெம்போ உரிமையாளர்கள், டிரைவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். பின்னர் மீண்டும் வழக்கம்போல் வாகனங்கள் இயங்க தொடங்கின.

மாநில எல்லையில் பதுக்கி கடத்தல்
குமரி  மாவட்டத்தில் இருந்து கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் கேரள  எல்லையில் காலி இடங்கள் மற்றும் ஹாலோ பிளாக் பிளாண்டுகளில் இறக்கி  வைத்துவிட்டு அங்கிருந்து கேரளாவுக்கு எளிதாக கொண்டு  சென்றுவிடுகின்றனர்.இதற்கு சோதனைசாவடி, காவல் நிலையம், வருவாய்  துறையினருக்கு உரிய மாமூல் கொடுக்கப்படுவதால் கடத்தல்காரர்களை  கண்டுகொள்வதில்லை என கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி...