×

மணல் கொள்ளையால் நீராதாரம் கேள்விக்குறியான நிலையில் கழிவுநீர், இறைச்சி கழிவுகளால் கூவமாக மாறிய பாலாறு: அதிகாரிகள் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

வேலூர்: கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகும் பாலாறு. கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திராவில் 33 கிமீ தொலைவும், தமிழகத்தில் 222 கிமீ தொலைவும் பாய்ந்து சென்னை அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. 30 ஆண்டுக்கு முன்பு பாலாற்றில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.இதை நம்பி வேலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் செய்து வந்தனர்.காலப்போக்கில், பாலாற்றில் ஆக்கிரமிப்பு, இரவு, பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்களால் பாலாறு பாழாகி நீராதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இப்படி மணல்கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றொரு புறம், தோல்தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரையும், நேரடியாக பாலாற்றில் விட்டு, மேலும் பாழாக்கி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் ஆந்திரவில் பெய்த மழையால் பாலாறு, பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாலாற்றில் வரும் தண்ணீர் ஒரளவுக்கு தூய்மையாக வருகிறது. ஆனால், வேலூர் சேண்பாக்கம் பாலாறு அருகே வெள்ளம் வரும்போது, வீடுகளில் வெளியேறும் கழிவுநீர், உள்ளாட்சி அமைப்புகளில் சேரும் குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகிறது. மேலும் பாலாறு புதிய பாலத்தின் அருகே உள்ள இறைச்சி கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகள் பாலாற்றில் நேரிடையாக கலக்கிறது. இதனால் பாலாற்றில் செல்லும் தண்ணீர் நச்சு தன்மையாக மாறுகிறது. மேலும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் கலந்து, நுரையுடன், துர்நாற்றம் வீசும் கூவம் ஆறாக பாலாறு மாறி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விடுவதால், தொழிற்சாலைகள், இறைச்சி கழிவுகளை எந்தவித பயமின்றி பாலாற்றில் நச்சு கழிவுகளை கலந்து விடுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தான் பெய்த மழையினால் பாலாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் கழிவுநீர், இறைச்சி கழிவுகள், கலப்பதால், பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தும் மக்களின் உடல்நல பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் முன்வர வேண்டும். மேலும் பாலாற்றில் கழிவுநீர் கலப்பது குறித்து தொடர்ந்து, கண்காணிக்க குழு அமைத்து, கழிவுநீர் கலப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறைபாலாறு முழுவதுமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி பாலாற்றில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டிய கட்டாயமும் நீராதாரத்தை பெருக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணியாகும். ஆனால் மணல் கடத்தலை தடுக்கவும், நீராதாரத்தை பெருக்கவும் போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேபோல் பாலாற்றில் கழிவுநீர் மற்றும் மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் கலப்பதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார்தான் மணல் கடத்தலை தடுக்க வேண்டும் என்று காரணங்களை கூறி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பொறுப்பை தட்டி கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அலட்சியம்பாலாறு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் கழிவுநீர் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் ரசாயனங்கள் கலப்பது, இறைச்சி கழிவுகள் கொட்டுவது, பாலாற்றின் ஓரம் திறந்த வெளியில் மாடுகளை வெட்டுவது போன்றவற்றால் நிலத்தடி நீர் விஷமாக மாறுகிறது. அதேபோல் பாலாற்றில் கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் காற்று மாசடைகிறது. இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசுபாடுகளை கண்காணித்து தடுக்க வேண்டிய முழு பொறுப்பும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே இருக்கிறது. திறந்த வெளியில் மாடுகள் வெட்டுவதை மாநகராட்சி சுகாதார துறையும் கண்டுகொள்வது இல்லை. இப்படி ஒவ்வொரு துறைகளும் கண்டுகொள்ளாமல் போவதால் தான் பாலாறு பாழாறாகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்….

The post மணல் கொள்ளையால் நீராதாரம் கேள்விக்குறியான நிலையில் கழிவுநீர், இறைச்சி கழிவுகளால் கூவமாக மாறிய பாலாறு: அதிகாரிகள் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Nandi mountain ,Kolar district ,Karnataka ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்