×

மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இலவச கழிவறைகள்: அசுத்தம் செய்வதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஜூன் 5: மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இலவச கழிவறைகள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0 ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்்ள அம்மா மாளிகை கூட்டரங்கில் நேற்று நடத்தியது. விழாவுக்கு, மேயர் பிரியா தலைமை வகித்து, சர்வதேச கழிப்பறை திருவிழா 3.0க்கான இலச்சினையை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பகுதிகளில் திறந்தவெளியினை சிறுநீர் மற்றும் மலம் கழித்தல் என கழிப்பிடமாகப் பயன்படுத்தும் இடங்களைக் கண்டறிந்து வரைபடமாக்குதல், விழிப்புணர்வுப் பிரச்சாரம், கழிவறைகளைத் தத்தெடுத்தல் மற்றும் அமைத்துத் தருதல், கழிவறைகளைப் பராமரிக்க பொதுமக்கள், நிறுவனங்கள், சமூக அமைப்புகளை ஊக்குவிக்கும் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார். ஒரு மாதம் முழுவதும் நடைபெறும் இந்த சர்வதேச கழிவறை திருவிழா 3.0வில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் மூலம் கழிவறை பற்றிய உரையாடல்கள் சென்னை மாநகரம் முழுவதும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விழாவின் போது, மேயர் பிரியா நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டாய்லெட் என்ற ‘புது கழிப்பிடம்’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துள்ளோம். கடந்த 2022ம் ஆண்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கக்கூஸ் என்ற செயலியை தொடங்கி வைத்தார். இந்த செயலி மூலம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், எந்தெந்த இடங்களில் டாய்லெட் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். அதைத்தொடர்ந்து, இன்று(நேற்று) மீண்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டாய்லெட் எங்கெங்கெல்லாம் இருக்கிறது, பொதுமக்கள் எந்த பகுதிகளில் பொது இடங்களில் சிறுநீர் கழிக்கிறார்கள், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படுகிறது, எந்த அளவுக்கு சுகாதார பிரச்னைகள் ஏற்படுகிறது என்ற ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒரு மாதம் நடைபெற உள்ளது.

இந்த அமைப்புகள் இணைந்து ஒரு குழு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவானது மாநகராட்சிக்குட்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து, பொது இடங்களில் சிறுநீர் கழிக்கக் கூடிய இடங்களை எல்லாம் கண்டறிந்து அந்த பகுதிகளில் எல்லாம் சுவர் விளம்பரம் செய்வதற்கான ஒரு திட்டத்தை வைத்துள்ளனர். அதை தொடர்ந்து சில பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பொது இடங்களை அசுத்தம் செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தி.நகர், ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக உள்ளது. அங்கு பொதுமக்களுக்கு தேவையான கழிப்பிடங்கள் உள்ளன. பெண்களுக்கு என்று மாநகராட்சி மூலம் நகரும் ஷீ டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. தி.நகர் போன்ற அதிகமாக மக்கள் கூடும் பகுதிகளில் கூடுதலாக டாய்லெட் வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தால் அந்த இடங்களில் இலவச கழிப்பறைகள் ஏற்படுத்தி தரப்படும்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 1400 இடங்களில் கழிப்பிடங்கள் உள்ளன. புதிதாக 416 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு கழிப்பிடங்கள் முன்பும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற கழிப்பிடங்களை சமூக விரோத செயலுக்கு சிலர் பயன்படுத்தினார்கள். அவை எல்லாம் தடுக்கப்பட்டு, தற்போது தனியார் மூலம் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முற்றிலுமாக கழிப்பிடங்கள் அனைத்தும் மாநகராட்சி கண்காணிப்பில் உள்ளன. மேலும், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாநகராட்சி சார்பில் செயல்பாட்டில் உள்ள இலவச கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த வேண்டும். இலவச கழிவறைகளை பொதுமக்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

குடிசை பகுதிகளில் கூடுதலாக தேவைப்படுகிறது என்றால் அங்கு கழிப்பறைகளை அமைத்துத் தர மாநகராட்சி தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இவ்விழாவில், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், தூய்மை தமிழ்நாடு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர்.வி.ஷஜீவனா, கூடுதல் ஆணையாளர்(சுகாதாரம்) டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, வட்டார துணை ஆணையாளர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், எம்.பி.அமித், கட்டா ரவி தேஜா, தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேஸ்வரி, வாஷ்லேப் நிறுவனர் கங்கா திலீப், இயக்குநர் செபின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் இலவச கழிவறைகள்: அசுத்தம் செய்வதை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,International Toilet Festival 3.0 ,Ribbon Building Complex ,Chennai Municipality ,Wash Lab, ,Sear and Recycle Bin Systems ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு