×

போரூர் அருகே மழைநீர் வெளியேற கால்வாய் ஷட்டர் திறப்பு: அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு

பூந்தமல்லி: போரூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வெளியேறும் வகையில், அங்கு தந்தி கால்வாயின் புதிய ஷட்டரை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று திறந்து வைத்தார். சென்னை புறநகர் பகுதிகளான அய்யப்பன்தாங்கல், பெரிய கொளுத்துவான்சேரி, ஈவிபி பிரபு அவென்யூ, தனலட்சுமி நகர், மதுரம் நகர், பரணிபுத்தூர், மவுலிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் ஒவ்வொரு மழைக் காலத்தின்போதும் தண்ணீர் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். மழைக் காலங்களில் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மதனந்தபுரம், முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் வழியாக அடையாறு ஆற்றில் சென்று கலக்கும். தற்போது உபரிநீர் கால்வாய் செல்லும் பகுதிகள் குடியிருப்புகளாக மாறிவிட்டன.மேலும், போரூர் ஏரியின் குறுக்கே தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதால் உபரிநீர் செல்ல வழியின்றி அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், பெரிய கொளுத்துவான்சேரி, தனலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மழையில் பாதிக்கப்பட்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரூ.100 கோடி மதிப்பில் போரூர் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற புதிய மதகுகளும், கட் அண்ட் கவர் கால்வாய்களும் அமைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையில் பெரிய கொளுத்துவான்சேரி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதைத் தொடர்ந்து, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தந்தி கால்வாய் வழியாக வரும் உபரிநீர் போரூர் எரியில் கலக்காத வகையில், ஒரு புதிய ஷட்டர் அமைக்கப்பட்டது. இந்நிலையில், போரூர் அருகே தந்தி கால்வாயின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்ட ஷட்டரை நேற்றிரவு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று திறந்து வைத்தார். இதில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, குன்றத்தூர் ஒன்றிய துணை சேர்மன் உமாமகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம், அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், பரணிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி தாமோதரன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி சாமிநாதன், உஷா நந்தினி எத்திராஜ், இளைஞரணி அமைப்பாளர் ஜனார்த்தனம், மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post போரூர் அருகே மழைநீர் வெளியேற கால்வாய் ஷட்டர் திறப்பு: அமைச்சர், கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Borur ,Poontamalli ,
× RELATED சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை; பேஸ்புக் காதலன் கைது