×

பொதுத்தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க போகிறீர்கள்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் கெடு

புதுடெல்லி: ‘சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரம், இந்த மாணவர்களுக்கான தேர்ச்சி, மதிப்பெண்களை எப்படி வழங்க உள்ளீர்கள்?’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. கொரோனா 2வது அலையின் பாதிப்பு கடுமையாக இருப்பதை கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மாணவர்களும், பெற்றோர்களும் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இது பற்றி ஜூன் 3ம் தேதிக்குள்  இறுதி முடிவை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, கடந்த 1ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அப்போது, ‘மாணவர்களின் பாதுகாப்பு, நலனில் சமரசம் செய்ய முடியாது,’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டத்தில் நடப்பாண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டு உள்ளது,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘மாணவர்களின் உடல்நலன், பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வை ரத்து செய்ததில் எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால், இந்த சூழலில் மாணவர்களை எந்த அடிப்படையில், எப்படி தேர்ச்சி அடைய வைக்க போகிறீர்கள்? அவர்களுக்கு எப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது? போன்றவை எங்களுக்கு முக்கிய கேள்வியாக உள்ளது. அது குறித்து விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லையே?’’ என கேட்டனர். இதற்கு பதிலளித்த கே.கே.வேணுகோபால், ‘‘அது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. எனவே, அது பற்றி பதிலளிக்க மூன்று வாரம் அவகாசம் வேண்டும்,’’ என்றார். அதை நிராகரித்த நீதிபதிகள், ‘‘இதில் மாணவர்களின் எதிர்காலம் அடங்கி உள்ளதால் காலம் தாழ்த்த விருப்பவில்லை. அதனால், சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த வகையான வழிமுறையில் மதிப்பெண் வழங்கப்பட உள்ளது என்ற  மதிப்பீடு முறை விவரங்களை 2 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும். சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகிய 2க்கும் இது பொருந்தும்,’’ என உத்தரவிட்டனர். பின்னர், வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.* முதலில் இந்த பிரச்னை முடியட்டும் பிறகு மாநிலங்கள் பற்றி பார்க்கலாம்இந்த வழக்கு விசாரணையின்போது மாணவர்கள் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, ‘‘பல மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்திலும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது இது குறித்தும் உரிய உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்,’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், ‘‘மாநில பாடதிட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான 12ம் வகுப்பு மாணவர்கள் உள்ளனர். இந்த மாணவர்களின் நலனும் எங்களுக்கு மிகவும் முக்கியம்தான். ஆனால், முதலில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்சி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடும் முறையை உருவாக்கட்டும். அதன் பிறகு, இந்த விவகாரம் குறித்தும் தெளிவான முடிவை எடுக்கலாம். அதுவரை இந்த விவகாரத்தில் மனுதாரர் பொறுமையுடன் இருக்க வேண்டும்,’’ என்றனர். * எப்படி தேர்ச்சி போடலாம் சிறப்பு குழு அமைக்க முடிவு12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி பற்றியும், மதிப்பெண் வழங்குவது பற்றியும் பரிந்துரைக்க, சிறப்பு குழுவை அமைக்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அந்த குழு வழங்கும் பரிந்துரை அடிப்படையில் மதிப்பீட்டை இறுதி செய்ய திட்டமிட்டுள்ளது. 10ம் ஆண்டு இறுதி தேர்வு மதிப்பெண் 11, 12ம் வகுப்புகளில் பள்ளிகள் நடத்திய தேர்வுகள், உள்மதிப்பீடு மற்றும் இந்தாண்டு நடைபெற்ற செயல்முறை தேர்வு முடிவுகள், ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கும் திட்டம் உள்ளதாக கருத்து நிலவுகிறது. …

The post பொதுத்தேர்வை ரத்து செய்தது மகிழ்ச்சி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்படி மதிப்பெண் வழங்க போகிறீர்கள்? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரம் கெடு appeared first on Dinakaran.

Tags : CBSE ,Supreme Court ,New Delhi ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...