×

ஒகேனக்கல் அருகே சுற்றுலா பயணிகளை விரட்டிய யானைகள்

பென்னாகரம் :  ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், சாலையை கடந்தபோது சுற்றுலா பயணிகளை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் யானைகள் அதிகம் உள்ளன. ஜவளகிரி, தளி, அஞ்செட்டி பகுதியில் இருந்து வரும் யானைகள் ஒகேனக்கல்லில் முகாமிடுகின்றன.

இந்த யானைகள், பகல், இரவு வேளையில், பென்னாகரம்-ஒகேனக்கல் சாலை வழியாக சின்னாறு பகுதியை நோக்கி செல்கின்றன. அங்கு ஆற்றில் தண்ணீர் அருந்தி விட்டு ஹாயாக வரும் யானைகள், சில நேரங்களில் சாலையிலேயே நின்றபடி இருக்கும். இதனால் முக்கிய பகுதிகளில் வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சாலையில் யானைகள் நிற்பதை கண்டு, வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடும் நிலை உள்ளது.

சிலர் செல்பி எடுப்பதும், கற்களை வீசுவதுமாக உள்ளனர். இதனால் யானைகள், அவர்களை விரட்டும் சம்பவங்களும் நடக்கிறது.  நேற்று மாலை 4 மணியளவில், பென்னாகரம்-ஒகேனக்கல் சாலையில் ஒட்டப்பட்டி என்ற இடத்தில் 5 யானைகள் சாலையை கடந்தன. அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் அதிர்ச்சியடைந்து தங்களுடைய வாகனத்தை திருப்பி கொண்டு பறந்தனர்.  அப்போது, யானைகள் சில வாகன ஓட்டிகளை மிரட்டும் பாணியில் விரட்டியது. இதனால் ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் வாகன ஓட்டிகள் நின்று விட்டனர். இரவு நேரத்தில், இப்பகுதியில் ஒற்றை யானை அட்டகாசம் உள்ளது. சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

 இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் திருமால் கூறுகையில், ‘தண்ணீர் தேடி யானை கூட்டம் சாலையை கடக்கும் சூழல் உள்ளது. அவ்வாறான நேரத்தில் அவைகளை சீண்டும் வகையில் சுற்றுலா பயணிகள் ஈடுபடக்கூடாது. அதேபோல் யானை உலாவும் இடங்களில் அமர்ந்து மது அருந்துவதோ, சாப்பிடுவதோ, போட்டோ எடுப்பதோ கூடாது. கூட்டமாக வரும் யானைகளாலும், ஒற்றை யானைகளாலும் ஆபத்து உண்டு. எனவே, வாகன ஓட்டிகள் மெதுவாக பயணிக்க வேண்டும். யானைகள் இருப்பது தெரியவந்தால் வனத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்,’ என்றார்.

Tags :
× RELATED 3 புதிய சட்டங்களை திரும்ப பெற...