×

காவிரிப் பிரச்னையில் நீதி கிடைக்காவிட்டால் தமிழகம் ஓரணியில் கிளர்ந்து எழுந்து போராடுவதை யாராலும் தடுக்க முடியாது: அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை

சென்னை: காவிரிப் பிரச்னையில் நீதி  கிடைக்காவிட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்து  போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க  முடியாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.காவிரி பிரச்னை தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரதமர் தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகா சென்று  விட்டார். எனவே, கர்நாடக தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு நீதிமன்றத்தில்  தெரிவித்தது. இதை பல கட்சிகள் கண்டித்துள்ளன.புதுவை முதல்வர் நாராயணசாமி: உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறிய தனது தீர்ப்பை நடைமுறைபடுத்த முடியாமல் திணறுகிறது என தெரிகிறது.  அதற்கு காரணம் மத்திய அரசு கொடுக்கும் அழுத்தம்தான் எனவும் புரிகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. புதுவையிலும் காங்கிரஸ்  ஆட்சி நடத்துகிறோம். ஒரே கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எங்களுக்கு காவிரி தண்ணீர்தான் முக்கியம்.

திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்): கட்சி நடத்துவது என்பது வேறு. ஆட்சி நடத்துவது என்பது வேறு. பிரதமர் பாஜ கட்சியை சேர்ந்தவர்.  கட்சி வேலைகள் அவருக்கு ஆயிரம் இருக்கலாம். ஆனால் ஒரு பிரதமர் அவர் நிறைவேற்றக் கூடிய பணிகளை அரசியல் சட்டப்படி நிறைவேற்றாமல்,  தேர்தல் வேலைக்கு போனேன். கட்சி கூட்டத்துக்கு போனேன் என்று சொல்வது ஏற்புடையதல்ல. கர்நாடக தேர்தலை மனதில் வைத்துக்கொண்டுதான்  மத்திய பாஜ அரசு செயல்படுகிறது.ராமதாஸ்(பாமக நிறுவனர்): ‘காவிரிப் பிரச்னையில் நான் அடிப்பது போல அடிக்கிறேன். நீ அழுவதைப் போல அழு’ என்பதைப் போன்று தான்  உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை அமைந்திருக்கிறது. தமிழக அரசோ இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரிப்  பிரச்னையில் வரும் 8ம் தேதியாவது தமிழகத்திற்கு நீதி கிடைக்காவிட்டால், அதைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்து  போராடுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

வைகோ (மதிமுக பொது செயலாளர்): உச்ச நீதிமன்றம் 4 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்று உத்திரவிட்டு இருப்பது வெறும்  கண்துடைப்பாகும். இதனால் காவிரிப் பிரச்னையில் தமிழகத்திற்கு உரிய நீதியோ தீர்வோ கிடைக்காது. மத்திய அரசு காவிரியில் தமிழகத்தின்  உரிமையை நிலைநாட்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே உரிய தீர்வாகும்.ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்):  விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் மீண்டும் மத்திய பாஜ அரசு கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  முறையிடுவதும், கால தாமதம் செய்வதும் தமிழக விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், பொது மக்களுக்கும் செய்து வருகின்ற திட்டமிட்ட மிகப்பெரிய  சதியாகும். விவசாயிகளின் உயிர் பிரச்சனையை முக்கிய கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படவில்லை.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சனையில், மாநில அரசு விட்டுக் கொடுத்து, மத்திய அரசின்  முடிவுகளுக்கு ஏற்ப இசைவாக செயல்பட்டு வருவது மத்திய அரசின் துரோகத்தை விட பெரும் துரோகம். காவிரி உரிமையை பாதுகாக்க தமிழக மக்கள்  அனைவரும் ஒருமித்தக் குரல் எழுப்ப முன்வர வேண்டும்.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): மத்திய மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு இழைத்துவரும் துரோகத்தின்  அடுத்தக்கட்டமாக இது உள்ளது. எனவே மத்திய அரசின் இத்தகைய தமிழக விரோதப் போக்கினை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்களை  முன்னெடுக்க வேண்டும். திருமாவளவன்(விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்): காவிரி உரிமையை மீட்கவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மத்திய பாஜ அரசுக்கு  எடுத்துக்காட்டவும் வலுவான போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்குத் தமிழக மக்கள் தயாராக வேண்டும்.

Tags :
× RELATED ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு...