பெரியாறு அணை விவகாரம் கேரள அரசை கண்டித்து ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம்

கம்பம்: முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க வேண்டும் என வலியுறுத்தியும், அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தபோதே உபரி நீரை திறந்து விட்ட கேரள அரசை கண்டித்தும், தேனி மாவட்டம், கம்பம் வஉசி திடலில் அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘1979ல் கேரளாவில் சில அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் பெரியாறு அணை பலம் இழந்துள்ளது என்று தெரிவித்தன. இதையடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவின்படி அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. அணையை பலப்படுத்திய பிறகும் நீர்மட்டத்தை கேரளா உயர்த்தவில்லை.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2014ல் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று முறை 142 அடி தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 138 அடியை கடந்தவுடன் உபரிநீர் வெளியேற்றப்பட்டது ஏன்? உடனடியாக பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும். ’’ என்றார். இதேபோல் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
‘152 அடி தண்ணீர் தேக்க வாய்க்கால் வெட்டணும்’ திண்டுக்கல் சீனிவாசன் உளறல்திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீர் நிறுத்திக் கொள்ளலாம் என கடந்த அதிமுக ஆட்சியில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது’’ என்றார். அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்டு, ‘‘அதிமுக ஆட்சியில் 152 அடிக்கு ஏன் தண்ணீர் நிறுத்தவில்லை’’ என கேட்டனர். அதற்கு திண்டுக்கல் சீனிவாசன், ‘‘மழை பெய்ய வேண்டும். வாய்க்கால் வெட்ட வேண்டும். அப்போதுதான் 152 அடி தண்ணீர் நிறுத்திக் கொள்ளலாம். ஆனால் மழை பெய்யவில்லை’’ என உளறி கொட்டினார். 

The post பெரியாறு அணை விவகாரம் கேரள அரசை கண்டித்து ஓபிஎஸ் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: