×

பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள தெருக்களின் பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டி விளம்பரங்கள் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தூய்மையை பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவுகளை அகற்றுதல், சாலை மையத்தடுப்புகளில் செடிகள் நடுதல், பாலங்களில் செங்குத்துப் பூங்காக்கள் அமைத்தல் போன்ற அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அரசு மாநகராட்சி கட்டடங்கள், பேருந்து நிறுத்த நிழற்குடைகள், பாலங்கள் உட்பட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வண்ண ஓவியங்களால் அழகுப்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சியின் சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் சாலைகளிலும் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தெருக்களின் பெயர் பலகைகள் மற்றும் இனி அமைக்கப்பட உள்ள பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் இதர விளம்பரங்களை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்பு சட்டதின் படி காவல் நிலையங்களில் புகார் அளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கி சென்னை மாநகரை சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் தெருக்களின் பெயர் பலகைகளில் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பெயர் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை...