×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விசாரிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் முன்னாள்  சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை விழுப்புரம் விசாரணை நீதிமன்றம்  விசாரிக்க தடையில்லை என தெரிவித்த உச்ச நீதிமன்றம்,  இது தொடர்பான வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற அவரது  கோரிக்கையை நிராகரித்துள்ளது. தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, கடந்த பிப்ரவரி 21ம் தேதி அவரை விழுப்புரத்தில் மரியாதை நிமித்தமாக சந்திக்க வந்த பெண் எஸ்பி.யிடம் காரில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறப்பு டிபிஜி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக திட்டம் மற்றும் வளர்ச்சித்  துறைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் ஆறு பேர் அடங்கிய விசாரணைக்  குழு அமைக்கப்பட்டது. சிபிசிஐடி காவல்துறை தரப்பிலும் தனியாக வழக்கு  பதிவு செய்யப்பட்டது. புகாருக்கு உள்ளான சிறப்பு டிஜிபி  ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு நடந்து வரும் விழுப்புரம்  விசாரணை நீதிமன்றத்தில் சிபிசிஐடி 400 பக்கங்கள் கொண்ட அறிக்கையை  தாக்கல் செய்தது.  இந்நிலையில், முன்னாள்  சிறப்பு டிஜிபி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று  கடந்த 6ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த விவகாரத்தை  பொருத்தமட்டில் உயர் நீதிமன்றம் இருக்கும்போது கீழமை நீதிமன்றம் விசாரணை  நடத்தி வருகிறது. இரண்டுக்குமே அதற்கான அதிகாரம் இல்லை. அதனால், விசாரணைக்கு தடை  விதித்து வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் யு.யு.லலித்,  அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி  வாதத்தில், ‘‘இந்த வழக்கில் அரசு அதிகாரிகள் அனைவரும்  மனுதாரருக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம்  காழ்ப்புணர்ச்சிதான். இதில், வழக்கு விசாரணையை  எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால், அது நேர்மையாக நடைபெற வேண்டும்  என்பதால் விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்,’’ என்றார்.  இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர்  கிருஷ்ணமூர்த்தியும், மூத்த வழக்கறிஞர் அரிஸ்டாட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் தங்களின் வாதத்தில், ‘‘இந்த விவகாரத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழு  வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் தான் சிறப்பு டி.ஜி.பி மீது நடவடிக்கை  மேற்கொண்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், குற்றம்  சாட்டப்பட்டவருக்கு உரிய சட்ட ரீதியிலான உதவிகளும் நியாயங்களும் கிடைக்க  வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சிறப்பு டிஜிபி மீதான  குற்றச்சாட்டுகள் தீவிரமானது மட்டுமல்ல. மிகவும் முக்கியத்துவம்  வாய்ந்ததும் கூட. இதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கை விழுப்புரம் விசாரணை நீதிமன்றமும் முறையாக விசாரித்து வருகிறது.  குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் உள்ளதாக போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளானவர் காவல் துறையின் உயர் அதிகாரியாக  இருந்தவர் என்பதால் அவருக்கு எதிரான வழக்கினை தினசரி நடத்தி உரிய நீதியினை  கிடைக்கச் செய்ய வேண்டிய கடமையும் உள்ளது,’’ என்றனர்.  இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தமிழக அரசின் கோரிக்கைகள், வாதங்களை நீதிமன்றம் ஏற்கிறது. இது தொடர்பான வழக்கை விழுப்புரம் விசாரணை நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம். அதற்கு எந்தவித தடையும் கிடையாது.  சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு தடை  விதிக்கப்படுகிறது. அதேப்போன்று சிபிசிஐடி போலீஸ் விசாரணையை உயர் நீதிமன்றம்  நேரடியாக கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்பதால் அது தொடர்பான வழக்கு  முடித்து வைக்கப்படுகிறது. வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை  நிராகரிக்கப்படுகிறது. மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை  முடித்து வைக்கிறோம்,’ என தெரிவித்தனர்….

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொந்தரவு முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான வழக்கை விசாரிக்க தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags :
× RELATED திரைப்பட நடன இயக்குநர் ஜானி...