×

பெங்கல் புயல் எதிரொலி மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்தால் 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்; பாதுகாப்பான இடங்களில் படகுகள், வலைகள்

மாமல்லபுரம், நவ.28: பெங்கல் புயல் எதிரொலியாக மாமல்லபுரம் கடற்கரையில் நேற்று காலை அலையின் சீற்றம் 7 அடி உயரத்துக்கு அதிகரித்து காணப்பட்டது. இதனால், அச்சமடைந்த மீனவர்கள் தங்களது படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை உள்ள மீனவ குப்பங்களில் 2500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழில் விளங்கி வருகிறது. இப்பகுதி, மீனவர்கள் நாள்தோறும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து விற்பனை செய்வது வழக்கம்.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 25ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பெங்கல் புயலாக வலுபெற்றது. இந்நிலையில், நேற்று காலை முதல் மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் அலைகள் சுமார் 7 அடி உயரத்துக்கு எழும்பி, கரையை நோக்கி வேகமாக வந்தன. இதனால், கரை பகுதியை தாண்டி, பல மீட்டர் தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்து, அங்குள்ள கடற்கரை உணவகங்களை வேகமாக தாக்கியது.

மேலும், 7 அடி உயரத்துக்கு கடல் அலைகளின் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. கடலுக்குள் அலைகளின் சீற்றம் அதிகரித்ததால், மாமல்லபுரம் உள்பட சுற்றுவட்டார மீனவ குப்பங்களில் பல அடி தூரத்துக்கு கடல் முன்னோக்கி வந்ததால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்தனர். இதனால், தங்களின் படகு மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான வைத்துள்ளனர். தற்போது, மாமல்லபுரத்தை பொறுத்தவரை மழை விட்டு விட்டு பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், கொக்கிலமேடு மீனவர் பகுதியில் இருந்து கோவளம் கடற்கரை வரை கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

The post பெங்கல் புயல் எதிரொலி மாமல்லபுரத்தில் கடல் சீற்றத்தால் 7 அடி உயரம் எழுந்த அலைகள்: மீனவர்கள் அச்சம்; பாதுகாப்பான இடங்களில் படகுகள், வலைகள் appeared first on Dinakaran.

Tags : Bengal storm ,Mamallapuram ,-feet ,Bengal ,Mamallapuram beach ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் – புதுச்சேரி 4 வழிச்சாலை...