பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில்பாதை பணிகளுக்கான உபகரணங்கள் வைத்திருந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் எரிந்து நாசமாகின. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் இருப்பு பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இப்பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைப்பதற்காக, அதே பகுதியில் ஒரு குடோன் அமைத்துள்ளனர். இதில் பல லட்சம் மதிப்பிலான தளவாட பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தன.இந்நிலையில், நேற்று காலை காட்டுப்பாக்கத்தில் மெட்ரோ ரயில்பாதை பணிகளுக்கு தேவையான உபகரணங்கள் வைத்திருந்த குடோன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அங்கு இரவு பணி முடிந்து தூங்கிய வடமாநில தொழிலாளர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். தகவலறிந்த பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் குடோனில் பற்றி எரிந்த தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி வீரர்கள அணைத்தனர். இவ்விபத்தில், குடோனில் இருந்த இரும்பு, மரக்கட்டை உள்ளிட்ட பல லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் எரிந்து நாசமாகிவிட்டன. எனினும், அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால், அவ்வழியே சென்ற மக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டது. புகாரின்பேரில் பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….
The post பூந்தமல்லி அருகே பரபரப்பு மெட்ரோ ரயில் குடோனில் தீ: பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் நாசம் appeared first on Dinakaran.