×

புல்லட்சாமியை வறுத்தெடுத்த சுயேச்சை எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதுச்சேரியில் புல்லட்சாமியை சுயேச்சை எம்எல்ஏக்கள் வறுத்தெடுத்துவிட்டார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஆமா.. புதுச்சேரியில் ராஜ்யசபா எம்பி பதவிக்காக பாஜ-என்ஆர் காங்கிரஸ் கட்சிகள் இடையே பெரும் கலவரமே நடந்து முடிந்திருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10  எம்எல்ஏக்களை கொண்ட என்ஆர் காங்கிரஸ் தங்கள் சார்பில் வேட்பாளரை இறக்க முடிவு செய்திருந்த நிலையில், 6 எம்எல்ஏக்களை கொண்ட பாஜ இப்பதவியை தட்டிப்பறிக்க திட்டமிட்டது. ஏற்கனவே 3 நியமன எம்எல்ஏக்கள், சபாநாயகர், 2  அமைச்சர்கள் என பல பதவிகளை லபக்கிக்கொண்ட பாஜ ராஜ்யசபா பதவிக்கும் ஆசைப்படுவதை அறிந்த புல்லட்சாமி தனது ஆஸ்தான சித்தர் கோயிலில் அமர்ந்து புலம்பினார். எதைஎதையோ செய்து பார்த்தும், பாஜவுக்கு தண்ணி காட்ட நினைத்த  அவரது திட்டம் பலிக்கவில்லை. டெல்லி மேலிடம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொடுத்த குடைச்சலால் வேறு வழியின்றி பாஜகவுக்கு சீட் வழங்க ஓகே சொல்லியிருக்கிறார். இதனிடையே நேற்று முன்தினம் தனது கட்சி எம்எல்ஏக்களுடன் புல்லட்சாமி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பாஜவை கண்டமேனிக்கு வறுத்தெடுத்திருக்கிறார்கள். அதிலும் புல்லட்சாமிக்கு ஆதரவு  அளித்து வரும் 3 சுயேட்சை எம்எல்ஏக்கள், நீங்கள் சிஎம் ஆவதற்குத்தான் நாங்கள் ஆதரவளித்தோம். பாஜகாரர்கள் உங்களிடம் இருந்து ஒவ்வொன்றாக பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாளை முதல்வர் பதவியையே கேட்பார்கள். கொடுப்பீர்களா என ஆவேசமாக கேட்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் கூட்டம் நடந்த இடத்தில் அமர்ந்து செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீர்களே என கர்ணன் பட பாடலையும் ஹம்மிங்  செய்திருக்கிறார்கள்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ரேஷன் கடை விவகாரம் என்ன…’’‘‘ஹனிபீ மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகளை அதிகப்படுத்தியுள்ளது. இதில் விற்பனை விபரம், பொருளின் சப்ளை விபரம். விற்பனை போக மீதம் இருப்பு விபரம் என துருவித் துருவி விசாரணை நடத்தி,   இதில் ஓரிரு இடங்களில் தவறு இருப்பது தெரிந்து நடவடிக்கை கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு கடத்தப்படும் அரிசியின் அளவு குறைந்தபாடில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறதாம். இதற்கென ரேஷன் கடை விற்பனையாளர்கள் பிற காரணங்களும் சொல்கின்றனர். ரேஷன் கடைகளுக்கு வழங்கும் அரிசி மூடையின் இருப்பை காட்டிலும், குறைவாகவே இருக்கிறது. மூடைக்கு குறைந்தது 3 கிலோ   குறைகிறது. இந்த அரிசி குடோனில் இருந்தே, இடைத்தரகருக்கு போகிறது என்கின்றனர் இவர்கள். மேலும், ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் பொதுமக்களிடமிருந்து அரிசி கொள்முதல் செய்யும் புரோக்கர்கள், கடந்த இலைக்கட்சி காலத்தில் ‘வருவாய்’ பார்த்து வந்த உணவு பிரிவு அதிகாரிகள் சிலரின் தொடர்பில் இப்போதும் இருந்து, இன்றைய ஆட்சிக்கு கெட்ட பெயரைத் தரும் விதத்தில், இவர்களே வெளிமாநில அரிசி கடத்தலை நடத்துகின்றனர் என்கின்றனர். நியாய விலைக்கடைகளில் ஆய்வு செய்வதோடு இல்லாமல், குடோன்களை கண்காணிப்பதுடன், அரிசி கடத்தும் வியாபாரிகள், கடந்த காலத்து இலைக்கட்சி ஆதரவு அதிகாரிகளையும் கண்காணித்து, இவர்கள் குறித்த விபரங்களை சேகரித்து நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டுமென்ற குரல் ரேஷன் கடைக்காரர்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாநகராட்சியில் நிதி நிலைமையை நிமிர்த்தும் வகையில் தொடர் நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாமே..’’‘‘நெற்களஞ்சிய  மாவட்டத்தில் சமீபத்தில் பொறுப்பேற்ற அதிகாரி, மாநகராட்சி நிர்வாகத்தின் நிதி நிலைமையை கண்டு அதிர்ந்து போய் விட்டாராம். கடந்த இலை ஆட்சியில்  மாநகராட்சி அதிகாரிகளின் மோசமான நிர்வாகத்தால் தான் தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க பணம் இல்லை என தெரிய வந்ததாம். இதனால் ஸ்மார்ட் சிட்டி  திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்ட கடைகளை நேர்மையான முறையில் பொது ஏலம்  விட்டு மாநகராட்சியில் நிதி நிலைமையை நிமிர்த்த அதிகாரி முயன்றார். தகவல்  அறிந்த இலை கட்சி முக்கிய நிர்வாகிகளிடம் இருந்து மறைமுகமாக அவர்களது ஆதரவாளர்களான வியாபாரிகள், வணிகர்கள் மூலம் அதிகாரிக்கு நெருக்கடி வந்ததாம்… இந்த தகவல் உளவுத்துறை மூலம் மேலிடத்திற்கு சென்றதால் மேலே  இருந்து கிரீன் சிக்னல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரி அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினார். இதில் கடைகள் பொது ஏலம் விடப்பட்டு ஒரு சில நாட்களில் பல கோடி ரூபாய் மாநகராட்சி நிர்வாகத்திற்குள் கொண்டு வந்துள்ளார். இதனால் ஊழியர்களுக்கு நிலுவையில் இருந்த ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் உடனடியாக செட்டில்மெண்ட் செய்யப்பட்டதால் ஊழியர்கள் அனைவரும்  மகிழ்ச்சியில் உள்ளார்களாம்..100 ஆண்டு காலமாக தனியாரிடத்தில் குத்தகை என்ற பெயரில் நகரின் மையப் பகுதியில் இருந்த 200 கோடி மதிப்புள்ள 1.15  லட்சம் சதுர அடி இடங்களை மாநகராட்சி வசம் கொண்டு வர அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் இதற்கு காரணமாம். இதில் கூத்து என்னவென்றால்… ஒரு சினிமா தியேட்டர் மாதந்தோறும் ரூ.200 மட்டுமே மாநகராட்சிக்கு வாடகையாக  இதுவரை செலுத்தி வந்ததோடு மாநகராட்சி இடத்தை அனுபவித்து வந்துள்ளனர். மாநகராட்சி இடத்தை கையகப்படுத்த முயன்ற அதிகாரி மேல் வணிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனராம். இலைகட்சி முக்கிய நிர்வாகிகளின் ஆதரவாளர்களான சில வணிகர்கள் அதிகாரியை மாற்ற கோரி நகர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினர்.  ஆனாலும்… அரசின் தலைமையிடத்திலிருந்து எதற்கும் அசராமல் சட்டப்படி தொடர்ந்து செயல்பட பச்சைக் கொடி காட்டப்பட்டதால் தொடர் அதிரடி நடவடிக்கை  இருக்கும் என மாநகராட்சி முழுவதும் ஒரே பேச்சாக உள்ளதாம்’’ என்றார்  விக்கியானந்தா. …

The post புல்லட்சாமியை வறுத்தெடுத்த சுயேச்சை எம்எல்ஏக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullatsamy ,Puducherry ,Peter ,
× RELATED புதுச்சேரி சுப்பையா சாலையில்...