×

2019ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றியை சுவைக்க எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைக்கும் முயற்சியில் தெலுங்குதேசம்

திருமலை: 2019ல் ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றிக்கனியை பறிக்க ஆந்திர முதல்வரும்,  தெலுங்குதேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடு  முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆந்திராவில் கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் மாநில பிரிவினையால் காங்கிரசுக்கு எதிராக திரும்பிய மக்களின் மனோநிலையை சரியாக கணித்து, அதற்கேற்ப பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தல் வியூகம் வகுத்து ஆட்சிக்கட்டிலை கைப்பற்றினார் சந்திரபாபுநாயுடு. அப்போதைய தேர்தலில் மாநில பிரிவினையால் நிதி உட்பட பல்வேறு இழப்புகளுக்கு ஆளான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும், வழங்கப்படும் என்ற தெலுங்குதேசம் மற்றும் பாஜவின் வாக்குறுதிகளை நம்பி ஆந்திர மக்களும் தொடர்ந்து தெலுங்குதேசத்தை ஆட்சியில் அமர வைத்தனர்.

இதற்கு அப்போது நாடு முழுவதும் வீசிய மோடி  அலையும் உதவியது. ஆனால் வரும் தேர்தல் என்பது தெலுங்கு தேசம் கட்சிக்கு மிக சவாலானது. ஆந்திராவில் அடுத்த ஆண்டு பொது தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசு முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதால், ஆந்திர அரசியலில் அனைத்து கட்சிகளும் தங்களின் பலத்தை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பிரதான எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலின் போது குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. அதுபோன்று இப்போது ஏதும் நடந்து விடக்கூடாது என்பதால் கடந்த 4 ஆண்டுகளாக தெலுங்குதேசம் கட்சியின் ஆட்சிக்கு எதிராக தனது முழுஅளவிலான எதிர்அரசியலை அக்கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி முன்னெடுத்து வந்துள்ளார்.

குறிப்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ராஜசேகரரெட்டியின் பிறந்த நாளில் இருந்து மாநிலம் முழுவதும் பாத யாத்திரையை மேற்கொண்டு மக்களின் குறைகளை நேரடியாக சென்று சந்தித்து வருகிறார். அவரது இந்த பிரசாரத்துக்கு ஆந்திர மக்கள் தரும் ‘ரெஸ்பான்ஸ்’ முதல்வர் சந்திரபாபுநாயுடுவை கொஞ்சம் ஆட்டம் காண வைத்துள்ளதாகவே தெரிகிறது. இதனால் பாஜவுடனான கூட்டணியை முறித்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தனது கட்சி அமைச்சர்களை பதவி விலக வைத்ததுடன், பாராளுமன்றத்திலும் மத்திய பாஜ அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான கடிதத்தையும் அளித்துள்ளார்.

இதன் மூலம் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் தருவதற்கு தயாரான தெலங்கானாவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சந்திரபாபுநாயுடு செக் வைத்துள்ளார். இரண்டு கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க போவதாக கூறியுள்ளன. ஆனாலும், அவர்களின் அதிரடியால் சந்திரபாபுநாயுடுவின் அரசியல் பாதை என்பது மாற்றப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆந்திராவின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் அரசியல் போர்க்களம் சூடுபறக்கும் நிலையில் சத்தமின்றி பவன்கல்யாண் மூலம் பாஜ தனது நீண்ட நாள் கனவான ஆந்திராவின் ஆட்சிக்கட்டிலை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதற்காக தென்னகத்தில் மூத்த அரசியல் தலைவரான சந்திரபாபுநாயுடுவை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாஜ திட்டம் தீட்டியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் நடிகர் ஒருவர் பேசிய பேச்சு ஆந்திர அரசியலில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது. ஆந்திர அரசியலை பொறுத்தவரை மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் தற்போது அங்கு இருக்கிறதா என்பதை தேடவேண்டிய நிலைதான். ஆகவே இந்த பரபரப்பில் அதன் சத்தம் கேட்குமா என்பது சந்தேகமே. இந்த நிலையில்தான் எதிர்க்கட்சிகள் தனக்கு எதிராக தனித்தனியாகவும், கூட்டாகவும் வைத்துள்ள சக்கர வியூகத்தை உடைப்பதில் தனது 40 ஆண்டு அரசியல் அனுபவத்தை பயன்படுத்தும் நிலையில் தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு தள்ளப்பட்டுள்ளார்.

Tags :
× RELATED எத்தியோப்பியாவில் இருந்து சென்னைக்கு...