- திருச்சி அரசு மருத்துவமனை
- திருச்சி
- திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி
- மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை காது, மூக்கு மற்றும் தொண்டை (ENT) துறை
- தின மலர்
திருச்சி: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை (இஎன்டி) பிரிவில் நேற்று நூறாவது செவிச்சுருள் வலை கருவி பொருத்தும் அறுவை சிகிச்சையினை செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை பத்ம பேராசிரியர் மோகன் காமேஸ்வரன் தலைமையில் மருத்துவர்கள் குழு இணைந்து செய்தனர். முன்னதாக மருத்துவமனையில் நூறாவது அறுவை சிகிச்சையினை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக இஎன்டி பேராசிரியர் பத்ம மோகன் காமேஸ்வரன் கலந்து கொண்டு பேசுகையில், உலக அளவில் பிறவி ஊனங்களில் மிகவும் அதிகமாக உள்ளது காது கேளாமை தான். காதுகேளாமை என்ற குறைபாடால் ஒரு குழந்தையின் மொழி வளர்ச்சி என்பது பாதிக்கப்படுவதோடு அந்த குழந்தையின் அறிவுத்திறனும் பாதிக்கப்படும். உலக அளவில் ஆயிரம் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை இந்த காது கேளாத ஊனத்தால் பாதிக்கப்படுகின்றனர்.இந்திய அளவில் ஆயிரம் குழந்தைகளில் இரண்டு குழந்தைக்கு இது ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் ஆயிரம் குழந்தைக்கு ஆறு குழந்தைகள் இது போன்ற காது கேளாத ஊனத்தால் பிறக்கிறார்கள். அதற்க காரணம் உறவுமுறை திருமணம்தான். உலக அளவில் காது கேளாத ஊனத்தில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
இதுவரை தமிழகத்தில் 5,300 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு செவி சுருள் வலை கருவி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவர்களுக்கான பேச்சு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும். ஆனால் இது முற்றிலும் இலவசமாக கலைஞரின் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பிறகு பல குழந்தைகள் தங்களுடைய வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றிக்கொண்டுள்ளனர் என்று பேசினார். அரசு மருத்துவக்கல்லூரி டீன் நேரு, மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அருண் ராஜ், அரசு மருத்துவ கல்லூரியின் துணை முதல்வர் அர்ஷியா பேகம், காது மூக்கு தொண்டை துறையின் தலைவர் பழனியப்பன், மயக்கவியல் நிபுணர் மோகன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மாணவிகள் செவிலியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
The post பிளஸ்2 ல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாற்றுதேர்வு திருச்சி அரசு மருத்துவமனை சாதனை காதுகேளாத குழந்தைகளுக்கான 100வது அறுவை சிகிச்சை appeared first on Dinakaran.