×

பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவும் ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்தித்து பேச மறுப்பு: வெறுமனே கைகுலுக்கி மட்டும் சென்றதால் ஏமாற்றம்

சென்னை: ஒரு நாள் பயணமாக சென்னை வந்த அமித்ஷாவை, ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். மோடி போலவே அமித்ஷாவும் வெறுமனே கைகுலுக்கி விட்டு சென்றதால் ஓபிஎஸ் ஏமாற்றம் அடைந்தார். அதே நேரத்தில் அமித்ஷா பங்கேற்ற விழாவை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்தார். சென்னையில் நேற்று நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவரை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜ தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து அவர் கார் மூலம் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். இரவு அவர் அங்கு தங்கினார். தொடர்ந்து அவர் நேற்று காலை 11.05 மணியளவில் கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து அவர் 11.25 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அழைப்பை ஏற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அவர் முதல் இருக்கையில் அமர்ந்து இருந்தார். ஆனால், எடப்பாடி விழா தொடங்கும் வரை வரவில்லை. அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டத்தை புறக்கணித்தார். அதைத்தொடர்ந்து 1 மணி முதல் 2 மணி வரை கலைவாணர் அரங்கத்தில் அமித்ஷா தங்கியிருந்தார். அங்கேயே அவர் மதியம் உணவையும் அருந்தினார். அந்த இடைப்பட்ட நேரத்தில் அமித்ஷாவை சந்திக்க ஓபிஎஸ் திட்டமிட்டார். இதற்காக ஒரு ஆடிட்டர் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் சந்திக்க அனுமதியும் வழங்கப்பட்டது. சந்திப்பின் போது அதிமுக உட்கட்சி பிரச்னை விவகாரம் தொடர்பாக அவர் பேச திட்டமிட்டிருந்தார். எடப்பாடி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கூற பட்டியல் போட்டுவைத்திருந்தார். பிரிந்துள்ள அதிமுகவை ஒன்றிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அமித்ஷாவிடம் வலியுறுத்துவார் என்றும் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமித்ஷாவை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். தனிப்பட்ட முறையில்  சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறவில்லை.  நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை  பரிமாறிக்கொண்டனர். அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து அமித்ஷா அங்கிருந்து புறப்பட்டு சென்னை திநகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பாஜவின் மையக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். ஏற்கனவே, மதுரை வந்த பிரதமர் மோடியை இபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக வரவேற்றனர். அப்போது இருவரும் தனித்தனியாக பேச திட்டமிட்டிருந்தனர். அங்கேயும் பிரதமர் வெறுமனே கைக்குலுக்கி விட்டு மட்டும் சென்றார். இவர்களின் பஞ்சாயத்து எதையும் கேட்கவில்லை. அதே போலவே அமித்ஷாவும் சென்று விட்டார். இருவரும் தனித்தனியாக செயல்படுவதை டெல்லி மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இரண்டு பேரும் சேர்ந்தால் மட்டுமே சந்தித்து பேச பாஜ மேலிடம் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. மோடி, அமித்ஷா சந்திப்பு திருப்தி: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், ‘‘பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது மகிழ்ச்சிக்கரமாக, திருப்திகரமாக இருந்தது’’ என தெரிவித்தார்….

The post பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவும் ஓபிஎஸ், இபிஎஸ்சை சந்தித்து பேச மறுப்பு: வெறுமனே கைகுலுக்கி மட்டும் சென்றதால் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Amit Shah ,CHENNAI ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்:...