×

பானை, செங்கரும்பு விற்பனை தீவிரம்

ஈரோடு, ஜன.13: தைப்பொங்கல் விழாவையொட்டி பானை, செங்கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருள்கள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. தைப்பொங்கல் விழா ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாநகர பகுதிகளில், பல வடிவங்களில் வண்ணங்கள் தீட்டப்பட்ட புத்தம்புதிய பொங்கல் பானைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில், சிறிய அளவிலான வண்ணம் தீட்டப்பட்ட பானை ரூ.200 முதல் ரூ.250 வரையும், 5 படி அரிசி வேகும் படியான பொங்கல் பானை சுமார் ரூ.700 முதல் ரூ.900 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இவை தவிர, மண் உண்டியல், பூந்தொட்டி, மண் அடுப்பு, மண் சட்டி, அகல் விளக்குகள் என பல்வேறு தேவைகளுக்கான மண்பாண்டங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, பொங்கல் விழாவில் முக்கிய அங்கம் வகிக்கும் செங்கரும்பு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. ஈரோடு, பன்னீர்செல்வம் பார்க், காளைமாடு சிலை, சூரம்பட்டி நால்ரோடு, வீரப்பன் சத்திரம், சூளை, கருங்கல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கரும்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.இவை, ரகத்துக்கு ஏற்றவாறு ஜோடி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல, பொங்கல் திருவிழாவில் முக்கிய அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு ஜோடி மஞ்சள் கொத்து ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படுகிறது. தவிர, பொங்கல் வழிபாட்டுக்கு தேவையான சர்க்கரை பூசணி, ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட், சின்ன மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேற்று விற்பனைக்கு அதிக அளவில் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, வெல்லம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, தேங்காய், வாழைப்பழம், வாழை இலை, கற்பூரம், ஊதுபத்தி உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

The post பானை, செங்கரும்பு விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Thai Pongal ,
× RELATED ஈரோடு வீரப்பம்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடையில் தீ விபத்து