×

பாதாள சாக்கடை திட்ட பணிகள் பிப்ரவரியில் முழுவதும் முடிந்துவிடும்: அதிகாரிகள் உறுதி

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை பணி வரும் பிப்ரவரியில் 100 சதவீதம் முடிந்துவிடும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 2019ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நான்கு மாடவீதிகள், ஓ.எம்.ஆர். சாலை, வணிகர் தெரு, சான்றோர் தெரு, திருவஞ்சாவடி தெரு ஆகிய பகுதிகளில் குழாய் புதைக்கும் பணி முடிவடைந்தது. ஆனால், குழாய் புதைக்கும் பணி முடிந்தாலும் சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டதால் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கடந்த வாரம் செங்கல்பட்டில் சாலைப் பாதுகாப்பு வார ஆலோசனை கூட்டம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் நடந்தது. இதில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி, திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடக்கும் பாதாள சாக்கடை திட்டத்தால் ஓஎம்ஆர் சாலை சேதமடைந்து இருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்து பேசினார்.இதைதொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் தலைமையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், திருப்போரூர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் திருப்போரூர் பகுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் ஆகியோர் இருந்தனர்.ஆய்வின், முதற்கட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில் 22 கிமீ தூரத்துக்கு குழாய்கள் புதைக்க வேண்டியதில் 98 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் 1.4 கிமீ தூரம் மட்டுமே குழாய்கள் புதைக்க வேண்டி யுள்ளது. ஓஎம்ஆர் சாலை மற்றும் இள்ளலூர் சாலையில் போக்குவரத்தை மாற்றி வேறு பாதைக்கு திருப்பினால் வரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் 100 சதவீத பணியை முடித்து விடுவோம். முதற்கட்ட பணிகள் முடிந்ததும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும்.2வது கட்ட திட்டத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த அனுமதி 15 நாட்களில் கிடைத்து விடும். அதில் விடுபட்ட பகுதிகளை சேர்த்து திட்டம் முழுமையாக நிறைவேறும் என அதிகாரிகள் கூறினர்….

The post பாதாள சாக்கடை திட்ட பணிகள் பிப்ரவரியில் முழுவதும் முடிந்துவிடும்: அதிகாரிகள் உறுதி appeared first on Dinakaran.

Tags : Tirupporur ,Tirupporur Perusie ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பகுதியில் சாலைகளில்...