×

நிசும்பசூதனி

தஞ்சாவூர்

அது சோழர்களின் தொடக்கக் காலம். நிசும்பசூதனியே வெற்றித் தெய்வம். சத்ரு நாசம் செய்யும் மாகாளி என எண்ணிய சோழகுலச் சக்ரவர்த்தியான விஜயாலயச் சோழன் எண்ணூற்று ஐம்பதாவது வருடம் தஞ்சையில் நிறுவினான். போருக்குச் செல்லும் போதெல்லாம் ‘தஞ்சையை காப்பாய் தேவி’ என்று அவள் பாதம் பணிந்துவிட்டுத்தான் யுத்த களத்திற்குச் செல்வானாம். மிகவும் ஆதாரபூர்வமான திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் ‘‘தஞ்சாபுரீம் சௌத சுதாங்கராகாம.... என்று தொடங்கும் வடமொழி வரிகளில் சும்பன், நிசும்பன் என்ற அரக்கர்களை அழித்து வெற்றிவாகை சூடிய நிசும்பசூதனி என்ற காளி தேவியை அங்கு பிரதிஷ்டை செய்தான்.

தேவியின் அருளால் நான்கு கடல்கள் ஆகிய ஆடையை அணிந்து ஒளி வீசுகின்ற பூமியை, ஒரு மாலையை அணிவது போலச் சுலபமாக ஆண்டு வந்தான் என்று முடிக்கிறது. மாமன்னன் பரம்பரையை புகழின் உச்சிக்கு கொண்டுசென்ற ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் அவள் திருவடி பணிந்தபின்தான் அன்றைய பணியைத் தொடங்குவானாம். போருக்கு முன்பு லட்சம் படை வீரர்களாயினும் சரி இவள் சந்நதியில் வீழ்ந்து வெற்றி வரம் கோரி யுத்தகளம் ஓடுவார்களாம். இவளே தஞ்சையின் காவல் தெய்வம். தஞ்சையின் புகழை தரணியெங்கும் ஒலிக்க விட்ட காருண்ய சூலினி. செல்வம் பெருக்கித் தந்த அட்சய மாகாளி இவளே. அன்றிலிருந்து இன்றுவரை அதேப் பொலிவோடும், அதேசக்தியோடும் விளங்குகிறாள் நிசும்பசூதனி.  
    தேவிமகாத்மியம் உரைக்கும் உருவத் தோற்றத்தை சிற்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள் சோழர்கள். மிக கோரமான உருவம். மூக்கு அழுந்தி அதற்குக் கீழே தெற்றுப்பற்கள் துருத்தியிருக்க ஒரு ஓரமாய் தலை சாய்த்து அரை பத்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள் நிசும்பசூதனி. தீச்சுடர் போன்ற கேசம். வற்றிய தோலும், விலா எலும்புகளோடு கூடிய பதினாறு கைகள். அதில் விதம்விதமான ஆயுதங்கள். பாம்பை கச்சமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். கால்கள் மெல்லியனவாக இருந்தாலும் காலுக்குக் கீழே நான்கு  அசுரர்களை வதைத்து அழுத்தும் கோபத்தை சிற்பத்தில் வடித்திருப்பது பார்க்கப் பிரமிப்பூட்டும். இவர்களே சண்டன், முண்டன், சும்பன், நிசும்பன். யுத்த களத்தில்  உக்கிரமாக போர் புரியும்போது நெஞ்சு நிமிர்த்தி எதிரியை நோக்கி பாயும் வன்மத்தையும், அதனால் முதுகுப் புறம் சற்று வளைந்து குழிவாக இருப்பதையும், எதிர்காற்றில் கபால மாலைகள் இடப்புறம் பறக்கும் வேகத்தையும் சிற்பமாக்கி கலையின் சிகரம் தொட்டிருக்கிறார்கள். பெண் எனும் சக்தி பொங்கியெழுந்தால் இப்படித்தான் வீறுகொண்டெழும் என்பதே நிசும்பசூதனி சொல்லும் விஷயம். அதேசமயம் தர்மத்தின் பக்கம் நிற்கும் நீதி தேவதை.

Tags :
× RELATED ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை