நாகர்கோவில், ஆக.19: காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் ஆஸ்கர் பிரடி தலைமையில் நிர்வாகிகள் குமரி மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: கல்குளம், விளவங்கோடு, கிள்ளியூர் தாலுகாக்களுக்கு பிரதான கால்வாயாக சிற்றாறு பட்டணம் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் சாமியார்மடம் பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் மற்றும் இரணியல் கால்வாயில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணியானது மெதுவாக நடைபெறுவதால் ஓராண்டுக்கு மேலாக தண்ணீர் வரத்து தடைப்பட்டு இருக்கிறது. இதனால் கிள்ளியூர் வட்டாரத்துக்குட்பட்ட பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. திருவட்டாறு, தக்கலை, குருந்தன்கோடு ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சில பகுதியும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் குளங்கள் வறண்ட நிலையில் உள்ளன. குடிநீர் உறை கிணறுகளும் தண்ணீரின்றி வறண்டு இருக்கிறது. வாழை விவசாயம், தென்னை விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவசர நிலையை கருதி பராமரிப்பு பணியினை போர்க்கால அடிப்படையில் முடித்து கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறி உள்ளனர். ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாவட்ட தலைவர் அஜிகுமார், துணைத் தலைவர் ஜிஜி, இளைஞர் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் சகாய பிரவீன் மற்றும் நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர்.
The post பாசன கால்வாய்களில் நடக்கும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் காங்கிரஸ் கோரிக்கை appeared first on Dinakaran.