×

பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:வாகனங்களை பயன்படுத்தி நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகள் பொருத்தும் திட்டம் 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  இதன் அடிப்படையில், 2019ம் ஆண்டுக்கு முன்பாக தயாரித்த வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை பொருத்தும் பணியை அமல்படுத்த தமிழக அரசு 2021 ஜனவரியில் டெண்டர் வெளியிட்டது.  இந்த டெண்டரை எதிர்த்து யார்யா சேகர் என்ற நிறுவனத்தின் இயக்குனர் செந்தாமரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவில், ஒன்றிய அரசு அறிவிப்பின்படி ஒன்றிய அரசின் உரிமம் பெற்ற நிறுவனங்கள்தான் அந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்பதால் டெண்டரை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தும் உத்தரவின்படியும், ஒன்றியஅரசு அறிவுரைப்படியும் அந்த பணிகளை அமல்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து செந்தாமரை தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி  ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டெண்டர் இறுதி செய்யப்படுகிறதா அல்லது ரத்து செய்யப்படுகிறதா என்று தமிழக அரசிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் காஜா நஸ்ருதீன் ஆஜராகி, மனுதாரர் கூறும் டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள்,   வழக்கை தள்ளுபடி செய்தனர்….

The post பழைய வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து: ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : iCord ,Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...