×

பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

சேலம், ஆக.19: இந்திய உணவு பாதுகாப்பு கழகம் குறித்து பள்ளிமாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம் சிவதாபுரம் அருகில் உள்ள இந்திய உணவு பாதுகாப்புக்கழகம் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிடங்கு மேலாளர் சக்திவேல் வரவேற்றார். மேலாளர் நிவேதா தலைமை வகித்தார். இயக்க மேலாளர் அர்விந்த், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் பிஜிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உணவை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்தறை அதிகாரிகள் கூறியதாவது: பொதுத்துறை நிறுவனமான இந்திய உணவு பாதுகாப்பு கழகம் 1965ம் ஆண்டு தொடங்கபட்டது. தமிழ்நாட்டில் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் முதன் முதலாக அலுவலகம் உருவானது. இதன் தலைமை அலுவலகம் தற்போது டெல்லியில் அமைந்துள்ளது. இதன் மண்டல அலுவலகங்கள் தென்னிந்தியாவில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாட்டில் உள்ளது. குறிப்பாக நெல் ஒரு கிலோ ₹20க்கு அரசு கொள்முதல் செய்கிறது. இதனால் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள கிடங்குகளில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கிருந்து மாநில அரசுகளுக்கு வழங்கி நியாய விலைக்கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1கிலோ நெல்லை ₹20க்கு விவசாயிடம் கொள்முதல் செய்து, ஆலைகளுக்கு அனுப்பி ₹40 மதிப்புள்ள அரிசி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இதில் வைட்டமின் பி, போலிக் ஆசிட், இரும்பு சத்து போன்றவை உள்ளது.

குறிப்பாக கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் கூட மக்கள் பசியால் பாதிக்காமல் இருக்க தடையின்றி இலவச அரிசி, கோதுமை வழங்கப்பட்டது. இங்கு உள்ள உணவு பொருட்களை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ராணுவ வீரர்கள் எல்லையை காப்பாற்றுவது போல, நாடு முழுவதும் உள்ள மக்கள் பசியால் யாரும் இருக்க கூடாது என்பதை ேநாக்கமாக கொண்டு உணவு பாதுகாப்பு கழகம் பொதுமக்களின் பசியை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதுபோன்ற பயனுள்ள தகவல்களை மாணவர்களுக்கு எடுத்துக்கூறி உணவு பாதுகாப்பு கழகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Salem ,Food Safety Corporation of India ,Salem… ,Dinakaran ,
× RELATED சேலம் மாநகராட்சி முன்னாள்...