×

போலீஸ் மீது மிளகாய்ப்பொடி தூவி கைதிகளை வெட்டி கொல்ல முயற்சி: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகரில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து கைதிகள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய கும்பலை 5 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல்லில் சின்னதம்பி என்பவர் கடந்த மார்ச் 2ம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியை சேர்ந்த விஷ்ணு (29), யுவராஜ் (28), 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பெண்களும் மதுரை மத்திய சிறையிலும், விஷ்ணு, யுவராஜ் உள்ளிட்ட 4 பேரும் விருதுநகர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

விஷ்ணு மற்றும் யுவராஜுக்கு கையில் காயம் இருந்ததால் அறுவை சிகிச்சை செய்வதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்னர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஆயுதப்படை காவலர் சிலம்பரசன் மற்றும் அழகுராஜா பாதுகாவலராக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்றிரவு கைதிகள் அனுமதிக்கப்பட்ட 4வது மாடிக்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல், பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சிலம்பரசன், அழகுராஜா மீது மிளகாய் பொடியை தூவி விட்டு, சிகிச்சையில் இருந்த கைதிகள் விஷ்ணு, யுவராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர்.

அப்போது, கைதிகளில் ஒருவரை மீட்டு, காவலர் அழகுராஜா, பக்கத்து அறையில் தள்ளி பூட்டியுள்ளார். காவலர் சிலம்பரசனிடம் துப்பாக்கி இருந்துள்ளது. ஆனால் அந்த அறையில் நோயாளிகள் பலர் இருந்ததால், அவரால் துப்பாக்கியை எடுத்து சுட முடியவில்லை. இதனால் துப்பாக்கியை திருப்பிப் பிடித்து, கொலை செய்ய வந்த கும்பலை சரமாரியாக தாக்கியுள்ளார். இதை பார்த்த நோயாளிகள் சிலர் அலறியடித்து வெளியே ஓடி விட்டனர். இதனால் துப்பாக்கியை உயர்த்திய சிலம்பரசன், சுட்டு விடுவேன் என்று எச்சரித்தால், முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுகுறித்து விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலீஸ் மீது மிளகாய்ப்பொடி தூவி கைதிகளை வெட்டி கொல்ல முயற்சி: விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Virudunagar Government Hospital ,Virudhunagar ,
× RELATED விருதுநகர் கலெக்டர் ஆபீசில் மஸ்தூர் பணியாளர்கள் மீண்டும் பணி கோரி மனு